Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
என்டிடிவி நிறுவனர் பிரணாய் ராயின் உண்மையான பெயர் பர்வேஷ் ராஜ் என்றும், பிரதமர் மோடியின் முகம் வரையப்பட்ட டார்ட் போர்டு அவர் அறையில் கண்டறியப்பட்டது என்பதாகவும் முழு நீளத் தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.
என்டிடிவி தொலைக்காட்சி சேனலின் நிறுவனரான பிரணாய் ராயின் டெல்லி மற்றும் டேராடூன் வீடுகளில் கடந்த 2017 ஆம் ஆண்டு சிபிஐ அதிரடி சோதனையில் ஈடுபட்டது.
இந்நிலையில், தற்போது “என்டிடிவி யின் உரிமையாளர் பிரணாய் ராயை சிபிஐ சோதனை செய்து நிறைய ரகசியங்களை வெளிப்படுத்தியது. ராயின் பிறப்புச் சான்றிதழ் கண்டுபிடிக்கப்பட்டது, அதன்படி அவரது உண்மையான பெயர் பர்வேஸ் ராஜா, மற்றும் அவர் பிறந்த இடம் கராச்சி. கண்டுபிடிக்கப்பட்ட மற்றொரு இரகசிய ஆவணத்தின்படி, NDTV யின் முழு வடிவம் நவாசத் தின் தௌபிக் வென்சார், இது பானோய் ராயின் தந்தையின் பெயர்.
அவரது மனைவி ராதிகாவின் உண்மையான பெயர் ரஹிலா . நரேந்திர மோடியின் முகத்தை இலக்காகப் பயன்படுத்தும் ஒரு டார்ட்போர்டு அவரது படுக்கையறையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு இந்தியருக்கும், உங்கள் கண்களைத் திறந்து இந்த இருமுக மக்களை அடையாளம் காண வேண்டிய நேரம் இது. இப்படி பல திருட்டு ஓநாய்கள் இந்தியாவுக்கு எதிராக இந்து பெயரில் ஒளிந்து பல சதி செயல்களை செய்கிறார்கள்.இந்த செய்தியை 10 வாட்ஸ்அப் குழுக்களுக்கு அனுப்பாத எவரும் அநேகமாக தாய்நாட்டிற்கு ஒரு தீங்கு செய்கிறார்கள்.” என்பதாக அவரது புகைப்படத்துடன் செய்தி ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் பின்னணியில் இருக்கும் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இதுக்குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
என்டிடிவி நிறுவனர் பிரணாய் ராயின் உண்மையான பெயர் பர்வேஷ் ராஜ் எனப் பரவும் புகைப்படச் செய்தியின் உண்மைத்தன்மை அறிய அது குறித்து ஆய்வு நடத்தினோம்.
அப்போது குறிப்பிட்ட அப்பதிவு, ஆங்கிலம், இந்தி உட்பட பல்வேறு மொழிகளில் சமூக வலைத்தளங்களில் 2017 ஆம் ஆண்டு நடந்த சிபிஐ சோதனைக்குப் பிறகு வைரலாக்கப்பட்டு வருவது நமக்குத் தெரிய வந்தது. 2020 ஆம் ஆண்டு, நியூஸ் செக்கர் இந்தியிலும் இதுகுறித்த ஃபேக்ட் செக் கட்டுரையை வெளியிட்டுள்ளோம். கடந்த 2017 ஆம் ஆண்டு, முதன்முதலில் @RoflGandhi_ என்கிற ட்விட்டர் அக்கவுண்டில் இந்த செய்தி கேலி செய்யும் வகையில் பதிவிடப்பட்டுள்ளது. அதனையே பலரும் உண்மையென்று நம்பி பதிவிட்டு வருகின்றனர்.
குறிப்பிட்ட அந்த வைரல் பதிவு, தற்போது தமிழில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது. ஐசிஐசிஐ நிறுவனம் குறித்து NDTV வெளியிட்ட செய்தியால் அந்த வங்கிக்கு நஷ்டம் ஏற்பட்டதாகவும், வங்கி மோசடி குறித்து அவர்கள் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் கடந்த 2017 ஆம் ஆண்டு பிரணாய் ராய்க்கு சொந்தமான இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியது.
குறிப்பிட்ட வைரல் செய்தியில் சொல்லப்பட்டது போன்று சிபிஐ வெளியிட்ட சோதனைக்குப் பின்பான அறிக்கையில் பிரணாய் ராயின் பெயர் பர்வேஷ் ராஜ் என்பதாகவோ, மோடி புகைப்படம் இடம்பெற்ற டார்ட் போர்டு கைப்பற்றப்பட்டதாகவோ எந்தவித வார்த்தைகளும் இடம் பெறவில்லை.
பிரணாய் ராய், மேற்கு வங்கத்தின் கொல்கத்தாவில் பிறந்தவர். அவரது தந்தை பெயர் ஹரிகேன் ராய். பிரணாய் கராச்சியில் பிறந்தவர் என்று பரவும் தகவலும் தவறானதாகும். தொடர்ந்து, NDTVயின் விரிவாக்கம் நவ்ஸுதின் தெளபிக் வென்ச்சர் என்று இடம்பெற்றிருக்கும் வாசகம் தவறானதே. 1988 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட NDTVயின் உண்மையான விரிவாக்கம் New Delhi Television என்பதாகும்.
அதேபோன்று, பிரணாய் ராயின் மனைவியான ராதிகா ராயும் கொல்கத்தாவில் பிறந்தவர். இவரது தந்தை சூரஜ் லால் தாஸ். சிபிஎம் கட்சியைச் சேர்ந்த பிருந்தா காரத் இவரது சகோதரி ஆவார்.
என்டிடிவி நிறுவனர் பிரணாய் ராயின் உண்மையான பெயர் பர்வேஷ் ராஜ் எனப் பரவும் புகைப்படச் செய்தி தவறானது என்பதை நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் எடுத்துக் காட்டியுள்ளோம்.
எனவே, வாசகர்கள் யாரும் அச்செய்தியை பகிர வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.
News Checker Hindi: https://newschecker.in/hi/fact-check-hi/is-ndtv-co-founder-pranab-roy-named-parvez-raja
BBC: https://www.bbc.com/tamil/india-40158336
The Hindu: https://www.thehindu.com/news/national/full-text-of-cbi-statement-on-ndtv-raids/article18730621.ece
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Ramkumar Kaliamurthy
June 10, 2025
Vijayalakshmi Balasubramaniyan
April 29, 2025
Vasudha Beri
April 3, 2025