Fact Check
சசிகலாவும் நடராசனும் சமூக நீதிக்கு எடுத்த நடவடிக்கைகளை கூட திமுக எடுக்கவில்லை என்றாரா சீமான்?

சசிகலாவும் நடராசனும் சமூக நீதிக்கு எடுத்த நடவடிக்கைகளை கூட திமுக எடுக்கவில்லை என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் அண்மைக் காலங்களில் பல சர்ச்சைகளில் தொடர்ந்து சிக்கி வருகின்றார். பெரியாருக்கு சிலை அமைப்பது எதற்கு என்று கேட்டது, பாலியல் புகாரில் சிக்கிய கே.டி.ராகவனுக்கு ஆதரவாக பேசியது போன்றவற்றை இதற்கு உதாரணமாக கூறலாம்.
இந்நிலையில் தற்போது “சசிகலா அம்மையாரும் அய்யா நடராசனும் சமூக நீதிக்காக எடுத்த நடவடிக்கைகளை கூட ஆறு முறை ஆட்சிப் பொறுப்பிலிருந்த திமுக செய்யவில்லை” என்று சீமான் பேசியதாக ஜூனியர் விகடனின் நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.



சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact check/ Verification
சசிகலாவும் நடராசனும் சமூக நீதிக்கு எடுத்த நடவடிக்கைகளை கூட திமுக எடுக்கவில்லை என்று சீமான் கூறியதாக நியூஸ்கார்ட் ஒன்று பரவியதைத் தொடர்ந்து, உண்மையிலேயே இவ்வாறு ஒரு செய்தியை ஜூனியர் விகடன் வெளியிட்டதா என்பதை அதன் சமூக வலைத்தளப் பக்கங்களில் தேடினோம்.
இந்த தேடலில் வைரலாகும் நியூஸ்கார்ட் போலியாக எடிட் செய்யப்பட்டது என்பதை நம்மால் அறிய முடிந்தது.
சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். மத்திய அரசின் நடவடிக்கைகள், உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக எழுப்பப்பட்ட பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.
இதில் சமூக நீதி நாள் குறித்து கேள்வி எழுந்தபோது, “பெரியார் மட்டும்தான் சமூக நீதிக்காக போராடினார் எனும் கட்டமைப்பை எங்களால் ஏற்க முடியாது. அவருக்கு முன்னாலேயே எங்கள் தமிழ் முன்னோர்கள் சமூக நீதிக்காக போராடியுள்ளார்கள். தமிழர்களின் வரலாறு பெரியாருக்கு பின், திராவிட கட்சிகளின் வருகைக்கு பின் என கட்டமைக்கப்படுவதை ஏற்க இயலாது” என பேசினார்.
இந்த நிகழ்வு குறித்து தமிழ் ஊடகங்கள் பலவற்றில் செய்தி வந்திருந்தது. ஜூனியர் விகடனும் இந்த செய்தியை வெளியிட்டிருந்தது.
இதில் பயன்படுத்தப்பட்டிருந்த நியூஸ்கார்டை எடிட் செய்தே மேற்கண்ட பொய் தகவல் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகின்றது. வாசகர்களின் புரிதலுக்காக உண்மையான நியூஸ்கார்டையும் எடிட் செய்யப்பட்ட நியூஸ்கார்டையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.


Also Read: பூப்புனித நீராட்டு விழா காரணமாக ஜிஎஸ்டி கூட்டத்திற்கு செல்லவில்லை என்றாரா நிதியமைச்சர்?
Conclusion
சசிகலாவும் நடராசனும் சமூக நீதிக்கு எடுத்த நடவடிக்கைகளை கூட திமுக எடுக்கவில்லை என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாக சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் முற்றிலும் பொய்யானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Altered
Our Sources
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)