Fact Check
திருவண்ணாமலை கோவிலில் அசைவம் உண்டதை நியாயப்படுத்தி பேசினாரா சேகர் பாபு?
Claim
திருவண்ணாமலை கோவிலில் அசைவம் உண்டதை நியாயப்படுத்தி பேசினார் சேகர் பாபு.
Fact
இத்தகவல் தவறானதாகும். சேகர் பாபு இதை தவறு என்றே பேசினார். வைரலாகும் நியூஸ்கார்டும் போலியானது என்று சன் நியூஸ் தரப்பு மறுத்துள்ளது.
அண்மையில் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ஒரு தம்பதியினர் அசைவ உணவை உண்டனர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் கோவிலில் பரிகார பூஜையும் நடந்துள்ளது.
இந்நிலையில் அத்தம்பதியினர் அசைவம் உண்டதை அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு நியாயப்படுத்தி பேசியதாக நியூஸ்கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.
“பசியால் கோயிலில் அசைவம் சாப்பிட்டதை வைத்து அரசியல் செய்யாதீர். சங்கிகள் கண்ணப்ப நாயனார் வரலாற்றை படியுங்கள்” என்று அமைச்சர் கூறியதாக அந்த நியூஸ்கார்டில் குறிப்பிடப்பட்டிருந்தது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: தமிழகத்தில் மீண்டும் ஞாயிறு அன்று முழு ஊரடங்கு என்று பரவும் வீடியோ தகவல் உண்மையா?
Fact Check/Verification
திருவண்ணாமலை கோவிலில் அசைவம் உண்டதை அமைச்சர் சேகர் பாபு நியாயப்படுத்தி பேசியதாக தகவல் ஒன்று பரவியதை தொடர்ந்து, அமைச்சர் சேகர் பாபுவை தொலைபேசி மூலம் தொடர்புக் கொண்டு இதுக்குறித்து விசாரித்தோம்.
அதில், “இத்தகவல் முற்றிலும் பொய்யானது. நான் அவ்வாறு கூறவே இல்லை. வேண்டுமென்றே இந்த பொய்யான தகவல் பரப்பப்படுகின்றது” என்று அமைச்சர் பதிலளித்தார்.
இதனையடுத்து தேடுகையில் “இறை பக்தி உள்ளவர்கள் அசைவ உணவை கோயிலுக்கு கொண்டுவரும் சூழலை தவிர்க்க வேண்டும்” என்று அமைச்சர் சேகர் பாபு பேசியதாக புதிய தலைமுறை செய்தி வெளியிட்டிருப்பதை காண முடிந்தது.
மேற்கிடைத்த ஆதாரங்களின்படி பார்க்கையில் வைரலாகும் தகவல் தவறானது என உறுதியாகின்றது.
இதனையடுத்து வைரலாகும் நியூஸ்கார்டானது சன் நியூஸின் நியூஸ்கார்டு டெம்ப்ளேட்டை பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருப்பதால் அந்நிறுவனம் இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை வெளியிட்டதா என அதன் சமூக ஊடகப் பக்கங்களில் தேடினோம்.
இத்தேடலில் சன் நியூஸ் இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை வெளியிட்டிருக்கவில்லை என அறிய முடிந்தது.
இதனையடுத்து சன் நியூஸின் டிஜிட்டல் துறை பொறுப்பாளர் மனோஜ்குமாரைத் தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்டு குறித்து விசாரித்தோம். அவர் வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது, இந்த கார்டை சன் நியூஸ் வெளியிடவில்லை என்று பதிலளித்தார்.
Also Read: அகமதாபாத் விமானம் வெடித்த காட்சி என்று பரவும் வீடியோ தகவல் உண்மையா?
Conclusion
திருவண்ணாமலை கோவிலில் அசைவம் உண்டதை அமைச்சர் சேகர் பாபு நியாயப்படுத்தி பேசியதாக பரவும் தகவல் முற்றிலும் தவறானதாகும். அமைச்சர் தரப்பும், சன் நியூஸ் தரப்பும் இதை உறுதி செய்துள்ளது.
இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
Phone Conversation with P.K. Sekar Babu, Minister of Hindu Religious and Charitable Endowments Department
Report from Puthiya Thalaimurai, Dated June 13, 2025
Phone Conversation with Manojkumar, Digital Head, Sun News