Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
Claim: விஜய்க்கு ஓட்டு போட மாட்டேன் என்றார் அரவிந்த் சாமி
Fact: இத்தகவல் தவறானதாகும். நடிகர் என்ற காரணத்தால் ஓட்டு போட மாட்டேன்; அவர்களின் திறனை வைத்தே மதிப்பிடுவேன் என்றே அரவிந்த் சாமி பேசியுள்ளார்.
நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் எனும் புதிய கட்சியை தொடங்கியுள்ளார். இக்கட்சி வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடாது என்றும், 2026 சட்டமன்றத் தேர்தலிலேயே போட்டியிடும் என்றும் இக்கட்சி சார்பில், விஜய் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் விஜய்க்கு ஓட்டு போட மாட்டேன் என்று அரவிந்த் சாமி கூறியதாக மாலை மலர் நியூஸ்கார்டு ஒன்று வெளியிட்டுள்ளது.
இந்த நியூஸ்கார்டை பலரும் பகிர்ந்து இதுக்குறித்த தங்கள் கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: திமுக ஆட்சியில் குறைந்த பின் சக்கரங்களுடன் ஓடும் அரசு பேருந்து எனப் பரவும் 2019ஆம் ஆண்டு வீடியோ!
விஜய்க்கு ஓட்டு போட மாட்டேன் என்று அரவிந்த் சாமி கூறியதாக மாலைமலர் வெளியிட்டிருந்த செய்தியில் விஜய் கட்சி தொடங்கியப் பின் அதுகுறித்து அரவிந்த் சாமி கருத்து கூறியதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் இதுக்குறித்த வீடியோ வைரலாகி வருகின்றது என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதை அடிப்படையாக வைத்து வைரலாகும் அவ்வீடியோவை கண்டறிந்தோம்.
இதனையடுத்து இவ்வீடியோவில் உள்ள கருத்தை எப்போது எந்த தருணத்தில் அரவிந்த் சாமி பேசினார் என்பது குறித்து தேடினோம். இத்தேடலில் லிட்டில் டாக்ஸ் எனும் யூடியூப் சேனலுக்கு அரவிந்த் சாமி அளித்த பேட்டியில் இவ்வாறு அவர் பேசி இருப்பதை காண முடிந்தது. இப்பேட்டியானது டிசம்பர் 07, 2018 அன்று அந்த சேனலில் பதிவிடப்பட்டிருந்தது.
இப்பேட்டியில் உங்களுக்கு அரசியலில் ஆர்வம் இருக்கின்றதா எனும் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, எனக்கு அரசியலில் ஆர்வம் இல்லை. ஒருவேளை எனக்கு ஆர்வம் வந்தால் முதலில் “ஆட்சிமுறை” குறித்த படிக்க வேண்டும். பிரபலமாக இருப்பதுக்கும் ஆட்சிமுறைக்கும் என்ன தொடர்பு? பிரபலமாக இருப்பதனால் எங்களுக்கு நல்ல அரசு திட்டங்களை தருவதற்கு உங்களுக்கு தகுதி இருக்கின்றது என எப்படி நம்புவது? மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்கிற நல்ல எண்ணம் உங்களுக்கு இருக்கலாம். ஆனால் ஒரு மாநிலத்தை ஆட்சி செய்வதற்கு, திட்டங்களை உருவாக்குவதற்கு எப்படி நீங்கள் உங்களை தகுதிப்படுத்தி கொண்டீர்கள்? நீங்க செய்ய முடியாது என்று நான் கூறவில்லை. செய்ய முடியும். ஆனால் உங்களை தகுதிப்படுத்திக் கொள்ள நீங்கள் படிக்க வேண்டியதும் அவசியம் அல்லவா? உங்களை சுற்றி சிறந்தவர்கள் இருக்கலாம். ஆனால் அவர்கள் சரியாக செய்கின்றார்களா, இல்லையா என்று பார்ப்பதற்கு ஒரு தலைவராக உங்களுக்கு ஏதாவது தெரிந்திருக்க வேண்டும்…. என்று அரவிந்த் சாமி பதிலளித்திருப்பதை காண முடிந்தது.
இதற்கடுத்து ரஜினி, கமல், விஜய் இம்மூவருக்கும் அரசியலில் ஆரவம் உள்ளது. நீங்கள் யாருக்கு ஆதரவளிப்பீர்கள் என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, யார் வேண்டுமென்றாலும் அரசியலுக்கு வரலாம். அதை நான் வரவேற்கிறேன். அவர்களுக்கு நல்ல எண்ணங்கள் இருக்கலாம். ஆனால் அவற்றை செய்வதற்கு அவர்களுக்கு திறன் இருக்க வேண்டியது அவசியம். கடைசியாக தேர்தலுக்கு முன் நீங்கள் என்ன கூறுகின்றீர்கள், அதை உங்களால் செய்ய முடியுமா, உங்களுடன் இருப்பவர்கள் யார், அவர்களால் உங்கள் திட்டங்களை நிறைவேற்ற முடியுமா என்று ஒரு வாக்காளனாக நானும் ஆராய்வேன். ரஜினியின் ரசிகன், கமலின் ரசிகன், விஜய் பிடிக்கும் என்பதற்காக நான் ஒட்டு போட்ட மாட்டேன். உங்களின் நல்ல எண்ணங்கள், திட்டங்கள் முதலில் எனக்கு தெரிய வேண்டும். ஒருவேளை அது தெரிந்தால், அவற்றை எப்படி செய்ய போகிறீர்கள், எதன் அடிப்படையில் செய்ய போகின்றீர்கள் என்பதைதானே நான் பார்க்க வேண்டும் என்று பதிலளித்திருந்தார்.
இதனடிப்படையில் பார்க்கையில் பொதுவாக ஒரு நடிகர் அரசியலுக்கு வந்தால் அவர் என்ன செய்ய வேண்டும் என்பதையும், ஒரு வாக்காளனாக தான் அவரிடம் எதை எதிர்பார்பேன் என்பதையுமே அரவிந்த் சாமி பேசியுள்ளார் என்பதை அறிய முடிகின்றது. இதுத்தவிர்த்து விஜய் குறித்து தனிப்படையாக அவர் எதுவும் பேசவில்லை என்பது தெளிவாகின்றது.
Also Read: விஜய்யை கூட்டணிக்கு அழைத்தாரா சீமான்?
விஜய்க்கு ஓட்டு போட மாட்டேன் என்று அரவிந்த் சாமி கூறியதாக மாலைமலர் வெளியிட்ட நியூஸ்கார்டு தவறானதாகும். இந்த உண்மையை உரிய ஆதாரம் மற்றும் விளக்கத்துடன் தெளிவு செய்துள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Our Sources
Youtube Video from Little Talks, Dated December 07, 2018
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Vijayalakshmi Balasubramaniyan
July 8, 2025
Ramkumar Kaliamurthy
July 8, 2025
Vijayalakshmi Balasubramaniyan
June 4, 2025