Fact Check
2ஜி அலைக்கற்றை விவகாரத்தில் உண்மையில் யாரிடம் மன்னிப்பு கோரினார் வினோத் ராய்? செய்தியின் முழு பின்னணி!
2ஜி அலைக்கற்றை விவகாரத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார் வினோத் ராய் என்கிற செய்தியை முன்வைத்து சமூக வலைத்தளங்களில் பல்வேறு கருத்துக்கள் பதிவிடப்பட்டு வருகின்றன.

2ஜி அலைக்கற்றை விவகாரம் பல ஆண்டுகளாக நாட்டையே உலுக்கிய ஊழல் வழக்குகளில் ஒன்று. முதன்முதலாக இந்த ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக 1.76 லட்சம் கோடி ஊழல் நடந்திருப்பதாக வாதத்தை முன்வைத்தவர் அன்றைய மத்திய அரசு தலைமை கணக்கு தணிக்கையாளர் வினோத் ராய்.
2ஜி ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் இன்றைய திமுக எம்.பி கனிமொழி, அன்றைக்கு தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருந்த அ.ராசா உள்ளிட்டவர்களும் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதுகுறித்து ஏற்கனவே பரவிய போலிச்செய்தி ஒன்றின் உண்மையும் பின்னணியும் குறித்து நாம் பகுப்பாய்வு செய்துள்ளோம். அதனை இங்கே இணைத்துள்ளோம்.
Read: 2ஜி வழக்கில் ஏப்ரல் 4 ஆம் தேதியன்று தீர்ப்பு அளிக்கப்படுகிறதா?
எனினும், இந்த வழக்கு விசாரணையில் முடிவில் 2ஜி ஊழல் குற்றச்சாட்டில் எந்தவித அடிப்படை முகாந்திரமும் இல்லை என்று நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து கனிமொழி, ராசா உள்ளிட்ட இக்குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்நிலையில், 2ஜி அலைக்கற்றை விவகாரம் குறித்து செய்தியறிகைகளிலும், பேட்டிகளிலும் குறிப்பிட்ட சி.ஏ.ஜி வினோத் ராய், அன்றைய இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கின் பெயர் இந்த விவகாரத்தில் இடம்பெறாமல் இருக்க காங்கிரஸ் கட்சி எம்.பியான சஞ்சய் நிருபம் தனக்கு நெருக்கடியான நிலையை ஏற்படுத்தியதாகக் குறிப்பிட்டிருந்தார்.
இந்த குற்றச்சாட்டை மறுத்த சஞ்சய் நிருபம், வினோத் ராயின் இக்கருத்துக்கு எதிராக அவதூறு வழக்கு ஒன்றினை டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் தொடர்ந்தார்.
இந்நிலையில், “2ஜி மன்னிப்பு கேட்ட வினோத் ராய். 2ஜி அலைக்கற்றை விவகாரத்தில் தவறான கருத்துகளை வெளியிட்டதற்காக டெல்லி நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார் முன்னாள் சி.ஏ.ஜி வினோத் ராய்” என்பதாக சஞ்சய் நிருபம் பெயரையோ, வினோத் ராய் மன்னிப்பு கேட்டதின் முழுப்பின்னணியையோ குறிப்பிடாமல் நியூஸ் கார்டு ஒன்றினை வெளியிட்டுள்ளது கலைஞர் டிவி.

இதனைத் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் இந்த நியூஸ் கார்டினை முன்வைத்து பல்வேறு வாதங்கள் பகிரப்பட்டு வருகின்றன. 2ஜி அலைக்கற்றை விவகாரம் தொடர்பாக அனைவரிடமும் வினோத் ராய் மன்னிப்பு கேட்டது போன்ற கருத்துக்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.



சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact check/ Verification
2ஜி அலைக்கற்றை விவகாரத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார் வினோத் ராய் என்று வெளியாகியிருக்கும் தனியார் தொலைக்காட்சியின் நியூஸ் கார்டினை முன்வைத்து பரவுகின்ற சமூக வலைத்தள தகவல்கள் குறித்த உண்மையறிய அதுகுறித்த முழுமையான விளக்கத்தை இங்கே அளித்துள்ளோம்.
முதலாவதாக, கலைஞர் செய்திகள் குறிப்பிட்ட அந்த நியூஸ் கார்டினை வெளியிட்டிருக்கிறது என்பதை அவர்களுடைய அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப்பக்கம் மூலமாக உறுதி செய்தி கொண்டோம்.
தொடர்ந்து, 2ஜி விவகாரத்தில் அன்றைய பிரதமர் மன்மோகன் சிங்கின் பெயரை இணைக்க வேண்டாம் என்று தனக்கு அழுத்தம் கொடுத்தவர்களில் சஞ்சய் நிருபமும் ஒருவர் என்று தெரிவித்திருந்தார். இந்த குற்றச்சாட்டினை மறுத்து வினோத் ராய் பெயரில் அவதூறு வழக்கு தொடர்ந்தார் சஞ்சய் நிருபம்.
இவ்வழக்கில், நேற்று (28/10/2021) சஞ்சய் நிருபத்தின் பெயரை தனக்கு அழுத்தம் கொடுத்த எம்.பிக்கள் பட்டியலில் தவறுதலாக குறிப்பிட்டுவிட்டேன் என்பதாக தெரிவித்த வினோத் ராய், அதற்காக சஞ்சயிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். இதனை எழுத்துப்பூர்வமாக அளித்துள்ளார். இதனைத்தொடர்ந்து, வினோத் ராய் மீது சஞ்சய் நிருபம் தொடர்ந்திருந்த அவதூறு வழக்கு முடிவுக்கு வந்துள்ளது.
வினோத் ராய் எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள விவரத்தையும் சஞ்சய் நிருபம் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, “இறுதியாக முன்னாள் சிஏஜி வினோத் ராய், நான் தொடர்ந்திருந்த அவதூறு வழக்கில் நிபந்தனையற்ற மன்னிப்பைக் கோரினார். அவர் 2ஜி விவகாரம் தொடர்பாக வெளியிட்ட தவறான கருத்துக்களுக்காக தேசத்திடமே மன்னிப்பு கேட்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட இச்செய்தியையே “2ஜி அலைக்கற்றை விவகாரத்தில் தவறான கருத்துக்களை வெளியிட்டதற்காக டெல்லி நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார் முன்னாள் சிஏஜி வினோத் ராய்” என்று வெளியிட்டுள்ளது கலைஞர் செய்திகள். ஆனால், அவர்களுடைய இணையதளச் செய்தியில் இதனை தெளிவாக தெரிவித்துள்ளனர். ஆனால், பலரும் கலைஞர் செய்திகளின் நியூஸ் கார்டின் அடிப்படையில் வினோத் ராய் பொதுப்படையாக 2ஜி அலைக்கற்றை விவகாரத்தில் மன்னிப்பு கேட்டதாக பகிர்ந்து வருகின்றனர்.
2ஜி அலைக்கற்றை விவகாரத்தில் திமுகவைச் சேர்ந்த எம்.பி கனிமொழி, முன்னாள் அமைச்சர் அ.ராசா உள்ளிட்டோர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்கள் அனைத்தும் போலியானவை என்று அவர்கள் விடுதலை செய்யப்பட்டுவிட்டாலும் கூட, தற்போது வினோத் ராய் மன்னிப்பு கேட்டிருப்பது சஞ்சய் நிருபமின் அவதூறு வழக்கில் மட்டுமே; 2ஜி விவகாரம் குறித்து பொதுப்படையாக இல்லை என்பது இதன்மூலம் உறுதியாகிறது.
Conclusion:
2ஜி அலைக்கற்றை விவகாரத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரினார் வினோத் ராய் என்று வெளியாகியிருக்கும் தனியார் தொலைக்காட்சியின் நியூஸ் கார்டினை முன்வைத்து பரவுகின்ற சமூக வலைத்தள தகவல்கள் தவறான புரிதலில் பரவுகின்றன என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Misleading
Our Sources:
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)