Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க சென்ற வாகனத்தின் டயர் பகுதியில் எலுமிச்சை பழம் வைத்து நசுக்கப்பட்டது போன்ற புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகிறது.
தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஒரு மாதத்திற்கு பிறகு நேற்று பிரதமர் மோடியை டெல்லியில் சென்று சந்தித்தார். நீட் தேர்வு, கொரோனா தடுப்பூசி, எய்ம்ஸ் மருத்துவமனை உள்ளிட்ட தமிழகம் சார்ந்த முக்கிய பிரச்சினைகள் குறித்த தேவைகளை பிரதமரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்துரைத்துள்ளார் என்று செய்திகள் வெளியாகின.
இந்நிலையில், “டெல்லியில் பகுத்தறிவு நசுக்கப்பட்ட தருணம்” என்று பல்வேறு வாசகங்களுடன் கார் புகைப்படம் ஒன்று வைரலாகிறது. அதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாகனத்தின் டயர்களுக்கு அடியில் எலுமிச்சை பழம் வைத்திருப்பது போன்று புகைப்படம் வெளியாகியுள்ளது.
பொதுவாக, எலுமிச்சை பழம் என்பதை வாகனங்களின் டயருக்கு அடியில் திருஷ்டி சார்ந்த பரிகாரங்களுக்காக நசுக்கும் வழமை தமிழகத்தில் இருந்து வருகிறது. திராவிடக் கொள்கைகள், கடவுள் மறுப்பு சித்தாந்தகளைக் கடைபிடிக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இதைச் செய்வதா என்கிற தொனி எழும் வகையில் இப்புகைப்படங்கள் பகிரப்பட்டு வருகின்றன.
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் இருந்து பிரதமர் மோடியைச் சந்திக்க சென்ற கார் டயரின் அடியில் திருஷ்டிக்காக எலுமிச்சை பழம் வைத்து இருந்ததாகப் பரவும் புகைப்படம் குறித்த உண்மைத்தன்மையை ஆராயத் தொடங்கினோம்.
முதலில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி சென்றடைந்த வாகனம் குறித்த செய்திகளை ஆராய்ந்தோம். டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் என்பது துவங்கி, அவர் பிரதமரைச் சந்தித்தது வரையில் சன் நியூஸ் தொலைக்காட்சி நிகழ்வுகளைக் காட்சிப்படுத்தியிருந்தது. அந்த வீடியோவின் மூலமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயன்படுத்திய அரசு சின்னம் பொருத்தப்பட்ட லேண்ட் க்ரூஸர் ரக காரின் பதிவு எண் DL 9C 0900. ஆனால், வைரலாகும் இனோவா வாகனத்தின் பதிவு எண் DL 9C 5858.
மேலும், இதுகுறித்து ஆராய்ந்தபோது டெல்லியில் பணியாற்றும் பத்திரிக்கையாளரான அரவிந்த் குணசேகர் என்பவரது ட்விட்டர் பதிவினைப் பார்க்க முடிந்தது. அதிலும், சன் நியூஸ் தொலைக்காட்சியில் காட்டப்பட்ட வாகனமே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயணத்திற்காக நிறுத்தப்பட்டிருந்தது.
தொடர்ந்து, டெல்லியில் பணியாற்றும் தமிழகத்தைச் சேர்ந்த பத்திரிக்கையாளர் நிரஞ்சன் குமார் குறிப்பிட்ட அந்த வைரல் புகைப்படம் குறித்த பதிவு ஒன்றினை பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார். குறிப்பிட்ட அந்த வைரல் புகைப்படம் நிரஞ்சனால் எடுக்கப்பட்டது என்பதும் அதில் உறுதியாகிறது.
அதில் அவர், “முதல்வர் ஸ்டாலின் டெல்லியில் பயன்படுத்திய காரின் டயருக்கடியில் எலுமிச்சம்பழம் வைக்கப்பட்டிருக்கிறது. இதுதான் பகுத்தறிவா என கேள்வி எழுப்பி நிறைய பேர் இந்த புகைப்படத்தை பகிர்கின்றனர். எடப்பாடியார் டெல்லி வந்திருந்தபோது எடுக்கப்பட்ட படம் இது. இதை எடுத்தது நான்தான். பின்னணியில் ஜெயலலிதா அவர்களின் புகைப்படம் இருப்பதை காண முடியும். அடுத்த புகைப்படம் நேற்றைய தினம் எடுத்தது. இதில் ஜெயலலிதா அவர்களின் புகைப்படம் இருக்காது.“ என்று தெரிவித்துள்ளார்.
எனவே, வைரலாகும் கார் புகைப்படமானது முன்னாள் முதல்வரும், இன்னாள் எதிர்க்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி 2018ஆம் ஆண்டு நிதி ஆயோக் கூட்டத்திற்காக டெல்லி சென்றிருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் என்பதும், தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயன்படுத்திய கார் புகைப்படம் அல்ல என்பதும் இதன்மூலமாக உறுதியாகிறது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் இருந்து பிரதமர் மோடியைச் சந்திக்க சென்ற கார் டயரின் அடியில் திருஷ்டிக்காக எலுமிச்சை பழம் வைத்து இருந்ததாகப் பரவும் புகைப்படச் செய்தி தவறானது என்பதை உரிய ஆதாரத்துடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Journalist Niranjan Kumar: https://www.facebook.com/niranjan.viscom
Journalist Aravind Gunasekar:https://twitter.com/arvindgunasekar
Sun News Tamil: https://youtu.be/FNSQDGvmozk
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Ramkumar Kaliamurthy
November 10, 2021
Vijayalakshmi Balasubramaniyan
June 10, 2024
Vasudha Beri
May 16, 2024