Authors
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.
சூரியனின் ஒரு பகுதி உடைந்ததாகவும், அதனை ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி படமெடுத்ததாகவும் சமூக வலைத்தளங்களில், செய்தி இணையதளங்களிலும் பரவலாக செய்தி வெளியாகியது.
“சூரியனின் பெரும்பகுதி உடைந்தது” என்பதாகவும், மக்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் இதனால் பீதி அடைந்திருப்பதாகவும் இச்செய்தி பரவி வருகிறது. சன் நியூஸ், சத்யம் தொலைக்காட்சி போன்ற முன்னணி செய்தி நிறுவனங்களும் இச்செய்தியை பகிர்ந்துள்ளன.
சமூக வலைத்தளங்களில் வைரலாகும் இப்புகைப்படம் குறித்த உண்மையறிய அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
Also Read: ஐரோப்பிய செய்தித்தாளில் பிரதமர் மோடியை புகழும் கார்ட்டூன் வெளியானதா? உண்மை என்ன?
Fact Check / Verification
சூரியனின் ஒரு பகுதி உடைந்ததை ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி படமெடுத்ததாக செய்தி சமூக வலைத்தளங்களில் பரவியதைத் தொடர்ந்து அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
சூரியனின் ஒரு பகுதி உடைந்ததாக செய்தி முதன்முதலில் Dr.Tamitha Skov என்னும் ஆராய்ச்சியாளர் கடந்த பிப்ரவரி 3 ஆம் தேதியன்று (IST) வெளியிட்டிருந்த ட்விட்டர் பதிவைத் தொடர்ந்து பரவ ஆரம்பித்தது.
அவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “Talk about Polar Vortex! Material from a northern prominence just broke away from the main filament & is now circulating in a massive polar vortex around the north pole of our Star. Implications for understanding the Sun’s atmospheric dynamics above 55° here cannot be overstated!” என்று பதிவிட்டிருந்தார்.
ஆனால், அவரது பதிவைத் தொடர்ந்து சமூக வலைத்தளங்களிலும் செய்திகளிலும் சூரியனின் ஒரு பகுதி உடைந்ததாகவும், ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி அதனைப் படம் பிடித்ததாகவும் செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து அவர் அதுகுறித்த விளக்கத்தை தனது அதிகாரப்பூர்வ Blog பக்கத்திலும், யூடியூபிலும் வெளியிட்டுள்ளார்.
அதில் அவர், “ட்விட்டரில் நான் வெளியிட்ட பதிவு வைரலாகியுள்ளது. ஸ்பேஸ்.காம் மட்டுமின்றி பலரும் அதனைத் தொடர்ந்து செய்திகளை வெளியிட்டுள்ளனர். ஊடகங்கள் எவ்வாறு ஒரு உண்மையை சிதைத்து வெளியிடுகின்றன என்பதை இதன்மூலம் உணர்ந்ததுடன், என்னுடைய முன்னறிவிக்கையை வெகுசீக்கிரமாக வெளியிட்டுள்ளேன்.” என்பதைத் தொடர்ந்து தன்னுடைய ட்விட்டர் பதிவிற்கான விளக்கத்தை வெளியிட்டுள்ளார்.
அதில், துருவ சுழல் (Polar vertex) என்று அவர் குறிப்பிட்டிருந்ததை சூரியனில் இருந்து ஒரு பகுதி உடைந்ததாக செய்திகளில் வெளியாகி வருகிறது; ஆனால் சூரியனின் வியக்கவைக்கும் செயல்பாடுகளில் இதுவும் ஒரு மிகவும் சாதாரணமான செயல் என்றும் விளக்கமளித்துள்ளார். சூரியனின் மேற்பரப்பில் சரியாக வடகிழக்குப் பகுதியில் இருந்து பிளாஸ்மா கதிர்வீச்சு இழை ஒன்று பிரிந்து சூரியனின் வடதுருவப்பகுதியின் மீது சுற்றியது. முதன்முறையாக இதனை ஆராய்ச்சியாளர்கள் கண்ணுற்றதால் பலரும் இதுகுறித்து விவாதித்து வருகின்றனர்.சூரியன் ஒரு வாயுக்கோள் என்பதால் அதில் எதுவும் உடைந்து போக இயலாது என்பதும் குறிப்பிடத்தக்கது.
அவர் ட்விட்டரில் பதிவிட்டிருந்த வீடியோவானது நாசாவின் Solar Dynamic Observatory பக்கத்தில் இருந்து எடுக்கப்பட்டு பதிவிடப்பட்டுள்ளது. கடந்த 2010 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து சூரியனின் செயல்பாடுகளைப் பதிவிட்டு வருகின்ற இப்பக்கத்தில் அக்காட்சியானது AIA (Atmospheric Imaging Assembly) என்னும் நான்கு தொலைநோக்கிகள் வரிசையாக ஒன்றிணைந்த செயல்பாடு மூலமாக எடுக்கப்பட்டதாகும்.
ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் அதிகாரப்பூர்வ பக்கங்களிலும் சூரியன் குறித்த எந்தவித புதிய பதிவும் இடப்படவில்லை. ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியானது மிகத்தொலைவில் இருந்தே அண்டங்களைப் படம் பிடிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், சூரியனின் கதிர்களில் இருந்து பாதுகாக்கும் வகையில் ஐந்தடுக்கு பாதுகாப்பு கவசம் இதில் இடம்பெற்றுள்ளது. ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியால் சூரியன் மட்டுமின்றி பூமியையும் நேரடியாக படம்பிடிக்க முடியாது; அவ்வாறு செயல்பட்டால் அதன் செயல்பாடுகள் அனைத்தும் பழுதடைந்துவிடும்.
கடைசியாக, ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் ”Webb Detects Extremely Small Main Belt Asteroid” என்கிற புகைப்படம் மற்றும் அதுகுறித்த செய்தியே பிப்ரவரி 6ஆம் தேதியன்று பதிவாகியுள்ளது. சூரியன் குறித்த எந்த செய்தியும் பதிவாகவில்லை.
நாசாவின் அதிகாரப்பூர்வ பக்கங்களிலும் இதுகுறித்த செய்திகள் முக்கியத்துவம் பெற்று இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Conclusion
சூரியனின் ஒரு பகுதி உடைந்ததாகவும், அதனை ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி படமெடுத்ததாகவும் சமூக வலைத்தளங்களில் பரவிய செய்தி தவறானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Sources
Blog Post From, Tamitha Skov
YouTube Video From, Tamitha Skov
Web Link From, SDO, Dated February 02, 2023
Solar System Exploration NASA
NASA
Twitter Post From, NASA Webb Telescope
Website of James Webb Telescope
NASA Website post, February 03, 2019
SSE NASA
SAO AIA
About JWST
Twitter NASA
CryogenicSociety.Org
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Authors
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.