திமுக கூட்டணியிலிருந்து விசிக வெளியேற வேண்டும் என்று அண்மையில் சுவரொட்டி ஒன்று ஒட்டப்பட்டதாக புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: 75 வயதிலும் தளராமல் நடனம் ஆடும் ஜெமினி கணேசன் மகள் நடிகை ரேகா என்று பரவும் வீடியோ உண்மையா?
Fact Check/Verification
திமுக கூட்டணியிலிருந்து விசிக வெளியேற வேண்டும் என்று அண்மையில் சுவரொட்டி ஒட்டப்பட்டதாக பரவும் புகைப்படத்தில், “‘ஒரு இடத்திற்கு 39 தொகுதியில் உழைக்க வேண்டுமா’, ‘2ஜியை நாம் சுமக்க வேண்டாம்’” உள்ளிட்ட வாசகங்கள் இருப்பதை காண முடிந்தது.

2ஜி வழக்கு என்பது 2010 காலக்கட்டத்திலேயே மிகப்பெரிய ஊடக வெளிச்சத்தை பெற்றது. 2014 பொதுத்தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி தோற்றதுக்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக இதுவும் பார்க்கப்பட்டது. அதேபோல் விசிக சார்பில் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தற்போது பதவியில் உள்ள நிலையில் ஒரு இடம் என்று இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவற்றையெல்லாம் வைத்து பார்க்கையில் வைரலாகும் சுவரொட்டி அண்மையில் ஒட்டப்பட்டதா எனும் சந்தேகம் நமக்கு ஏற்பட்டது. ஆகவே வைரலாகும் படத்தை கூகுள் லென்ஸ் உதவியுடன் ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி அப்படம் குறித்து தேடினோம்.
இத்தேடலில் மார்ச் 23, 2014 அன்று ஹரிஹரன் கஜேந்திரன் என்பவர் வைரலாகும் இதே படத்தை அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதை காண முடிந்தது.

இதனையடுத்து விசிக துணை பொதுச் செயலாளர் வன்னி அரசை தொடர்புக்கொண்டு இந்த சுவரொட்டி குறித்து விசாரித்தோம். அவர், இந்த சுவரொட்டி 2014 ஆம் ஆண்டில் ஒட்டப்பட்டது என்றும், இதுக்குறித்து அச்சமயத்தில் விசாரிக்கையில் விசிக தொடர்புடையவர்கள் இதை ஒட்டவில்லை என்று தெரிய வந்ததாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து தேடுகையில் 2018 ஆம் ஆண்டு இந்த சுவரொட்டியின் படம் சமூக ஊடகங்களில் பரவியதை தொடர்ந்து, “இந்த சுவரொட்டியை விசிக ஒட்டவில்லை; விஷமிகள் இதை பரப்பி வருகின்றனர்” என்று விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்ததாக இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் செப்டம்பர் 20, 2018 அன்று செய்தி வெளியிட்டிருப்பதை காண முடிந்தது.

Also Read: அன்புமணி தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் என்று கருத்துக்கணிப்பு வெளியிட்டதா சி வோட்டர்?
Conclusion
திமுக கூட்டணியிலிருந்து விசிக வெளியேற வேண்டும் என்று சுவரொட்டி ஒன்று அண்மையில் ஒட்டப்பட்டதாக பரவும் புகைப்படம் பழைய படம் என்பதும், உண்மையில் இந்நிகழ்வு அண்மையில் நடந்தது அல்ல; 2014 ஆண்டில் நடந்தது என்பதும் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
Phone Conversation With Vanni Arasu, Deputy General Secretary, VCK
X post by Hariharan Gajendran, dated March 23, 2014
Report by Indian Express Tamil, dated September 28, 2018