Fact Check
‘அடுத்த 6 மாதத்தில் மீடியாவின் நிலையைப் பாருங்கள்’ என்றார் அண்ணாமலை; வைரலாகும் நியூஸ் 7 தமிழ் நியூஸ்கார்ட் உண்மையானதா?
‘அடுத்த 6 மாதத்தில் மீடியாவின் நிலையைப் பாருங்கள்’ என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியதாக நியூஸ் 7 தமிழ் நியூஸ்கார்ட் ஒன்று வைரலாகி வருகின்றது.

தமிழக பாஜகவின் தலைவராக இருந்த எல்.முருகன் அவர்களுக்கு மத்திய இணை அமைச்சர் பதவி கிடைத்தவுடன், அவர் வகித்த பாஜக தலைவர் எனும் பொறுப்பிலிருந்து அவர் விலக்கப்பட்டு, அப்பொறுப்பானது முன்னாள் ஐபிஎஸ் அதிகாரியான அண்ணாமலை அவர்களுக்கு பாஜக தலைமையால் வழங்கப்பட்டது.
அண்ணாமலை அவர்கள் பாஜக தலைவராக இன்று (ஜூலை 16) பொறுப்பேற்க உள்ளார். இந்நிலையில் , “மீடியா போலியான செய்தியை பரப்புகிறது என்று கவலைப்பட வேண்டாம். அடுத்த 6 மாதத்தில் மீடியாவின் நிலையைப் பாருங்கள்” என்று அண்ணாமலை அவர்கள் பேசியதாக நியூஸ் 7 தமிழின் நியூஸ்கார்ட் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.



சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: குடும்ப அட்டைக்கு ரூ.1000 வழங்குவது சாத்தியமில்லை என தமிழக அரசு அறிவித்ததா?
Fact Check/Verification
“மீடியா போலியான செய்தியை பரப்புகிறது என்று கவலைப்பட வேண்டாம். அடுத்த 6 மாதத்தில் மீடியாவின் நிலையைப் பாருங்கள்” என்று அண்ணாமலை பேசியதாக வைரலாகும் நியூஸ்கார்டை உண்மையாகவே நியூஸ் 7 தமிழ் பிரசுரித்ததா என்பதை அறிய நியூஸ் 7 தமிழின் பக்கங்களில் இந்த நியூஸ்கார்ட் குறித்து தேடினோம்.
நம் தேடலில் இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை நியூஸ் 7 தமிழ் பிரசுரித்ததற்கான எந்த ஒரு ஒரு தரவும் நமக்கு கிடைக்கவில்லை. இதனையடுத்து நியூஸ் 7 தமிழின் டிஜிட்டல் துறையினரைத் தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்ட் குறித்துக் கேட்டோம்.
இதற்கு அவர்கள்,
“இது போலியான நியூஸ்கார்ட், இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை நாங்கள் பிரசுரிக்கவில்லை.”
என்று விளக்கமளித்தனர்.
அண்ணாமலை அவர்கள் தொண்டர்களிடம் பேசும்போது, “2024 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் தமிழ்நாடு பாஜக எம்.பி.க்கள் பலர் இடம் பெற்றிருப்பார்கள்; இது ஆரம்பம் மட்டுதான்; கடுமையாக உழைப்போம்; கட்சியை வளர்ப்போம்” என்று பேசியதாக நியூஸ் 7 தமிழ் நியூஸ்கார்ட் ஒன்றை தங்களது சமூக வலைத்தளப் பக்கங்களில் வெளியிட்டிருந்தது.

இந்த நியூஸ்கார்டே எடிட் செய்யப்பட்டு சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகின்றது. வாசகர்களின் புரிதலுக்காக உண்மையான நியூஸ்கார்டையும், எடிட் செய்யப்பட்ட நியூஸ்கார்டையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.

இதனடிப்படையில் பார்க்கும்போது நியூஸ் 7 தமிழ் வைரலாகும் நியூஸ்கார்டை பிரசுரிக்கவில்லை என்பது தெளிவாக தெரிகின்றது. ஆனால் அண்ணாமலை அவர்கள் மீடியா குறித்து மேற்கூறியவாறு பேசினாரா? இல்லையா என்பது குறித்து தெளிவை நாம் பெற வேண்டியது அவசியமாகும். ஆகவே அடுத்ததாக அதுக்குறித்து நாம் தேடினோம்.
நம் தேடலில் அண்ணாமலை அவர்கள் மீடியாவை குறித்து பேசியது உண்மையே என்பது நமக்கு தெரிய வந்தது.
” இந்த மீடியாவை நீங்கள் மறந்து விடுங்கள். நம்மளை பத்தி பொய்யா செய்தி போடுறாங்கள். என்ன பண்ணலாம். அதையெல்லாம் நீங்கள் மறந்து விடுங்கள். அடுத்த ஒரு 6 மாதத்திற்குள் பார்ப்பீர்கள், அந்த மீடியாவை நாம் கன்ட்ரோல் பண்ணலாம், கையில் எடுக்கலாம்.
காரணம் என்னவென்றால், தொடர்ந்து பொய்யான விஷயங்களை எந்தவொரு ஊடகமும் சொல்ல முடியாது. இத்தனைக்கும், முன்னாள் மாநில தலைவராக இருந்த முருகன் ஐயா அவர்கள் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் அமைச்சராக உள்ளார். எல்லா ஊடகங்களும் அவருக்கு கீழே தான் வர போகுது. தொடர்ந்து தப்பான செய்தியை செய்ய முடியாது. அதை வைத்து அரசியல் செய்ய முடியாது ”
என்று அண்ணாமலை பேசியுள்ளார்.
Also Read: கொங்கு நாடு உருவாக்கப்பட உள்ளதாக தகவல்; வைரலாகும் புதிய தலைமுறை நியூஸ்கார்ட் உண்மையானதா?
Conclusion
அடுத்த 6 மாதத்தில் மீடியாவின் நிலையைப் பாருங்கள் என்று அண்ணாமலை பேசியதாக வரும் தகவல் உண்மையானதே. ஆனால் இதுக்குறித்து நியூஸ் 7 தமிழ் செய்தி வெளியிட்டதாக வைரலாகும் நியூஸ்கார்ட் போலியாக எடிட் செய்யப்பட்டதாகும்.
இத்தகவலை உரிய ஆதாரத்துடன் விளக்கியுளோம். ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Altered/Imposter
Our Sources
News 7 Tamil: https://www.facebook.com/news7tamil/posts/4807660499296120
ABP Naadu: https://www.youtube.com/watch?v=dO6-82YDZA4
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)