திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு 100 வருட கோயிலை இடித்தேன் என்று பெருமை பேசியதாக வீடியோ ஒன்றை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அவரது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
100 வருட கோவிலை இடித்தேன் என்று திமுகவை சேர்ந்தவர் பெருமையாக கூறிக்கொள்கிறார். இதற்காகவே இந்து அறநிலையத்துறையை கலைக்க வேண்டும். அரசின் பிடியிலிருந்து கோயில்களை விடுவிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகின்றோம் என்று குறிப்பிட்டு அண்ணாமலை இந்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.
அண்ணாமலை பகிர்ந்த அவ்வீடியோவில், “100 வருட கோவிலை இடித்து இருக்கிறேன். என்னுடைய தொகுதியில் சரஸ்வதி கோவில், லட்சுமி கோவில் , பார்வதி கோவில் என மூன்று கோவில்கள் என் தொகுதியில் இருந்தது. ஜிஎஸ்டி தெருவில் பார்த்தீர்கள் என்றால் அந்த மூன்று கோயில்களையும் கட்டியிருப்பார்கள். அந்த மூன்று கோயில்களையும் நான்தான் இடித்தேன். எனக்கு ஓட்டு வராது என்று தெரியும், ஆனால் ஓட்டு எப்படி வர வைக்க வேண்டும் என்பதும் தெரியும். ஓட்டு வராது. தயவு செய்து இடிக்காதீர்கள் என எனக்கு தோழர்கள் எல்லாரும் சொன்னார்கள்” என்று டி.ஆர்.பாலு பேசி இருந்தார்.

அண்ணாமலை தவிர்த்து பாஜவைச் சேர்ந்த சி.டி.ஆர்.நிர்மல்குமார், சௌதாமணி உள்ளிட்டோரும் இதே வீடியோவை பகிர்ந்துள்ளனர்.


சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Factcheck / Verification
திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு 100 வருட கோயிலை இடித்தேன் என்று பெருமை பேசியதாக அண்ணாமலை அவரது டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டதை தொடர்ந்து இதுக்குறித்து தேடினோம். இத்தேடலானது “சேது சமுத்திர கால்வாய் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி மாநாடு” என்று தலைப்பிட்டு நியூஸ் 18 தமிழ்நாடு வெளியிட்ட வீடியோ ஒன்றிற்கு நம்மை அழைத்துச் சென்றது.
இந்த வீடியோவில் 49 நிமிடம் 53 விநாடியில் வைரலாகும் வீடியோவில் காணப்படும் டி.ஆர்.பாலு பேச்சு இடம்பெற்றிருந்தது. அதில்,
நான்கு வழி சாலைக்காக 100 வருட கோயிலை இடித்துள்ளேன், மேற்கு வங்கத்தில்100 வருட மசூதியை இடித்துள்ளேன். கோயில், மசூதி, மாதா கோயில்களை இடித்துள்ளேன். வழிபாடு தலங்களை இடிக்கும்போதெல்லாம் மக்கள் வந்தார்கள்….
அவர்களிடம் எங்கள் ஊரில் என்னுடைய தொகுதியில் சரஸ்வதி கோவில் , லட்சுமி கோவில் , பார்வதி கோவில் என மூன்று கோவில்கள் என் தொகுதியில் இருந்தது. ஜிஎஸ்டி தெருவில் பார்த்தீர்கள் என்றால் அந்த மூன்று கோயில்களையும் கட்டியிருப்பார்கள். அந்த மூன்று கோயில்களையும் நான்தான் இடித்தேன். எனக்கு ஓட்டு வராது என்று தெரியும், ஆனால் ஓட்டு எப்படி வர வைக்க வேண்டும் என்பதும் தெரியும். ஓட்டு வராது. தயவு செய்து இடிக்காதீர்கள் என எனக்கு தோழர்கள் எல்லாரும் சொன்னார்கள். எனக்கு வேறு வழி கிடையாது. அதை இடித்துதான் ஆக வேண்டும். அவர்களுக்கு இதை விட சிறப்பாக, 100 பேர் அமருமாறு உள்ள மண்டபத்துடன் அக்கோயில்களை கட்டிக் கொடுக்கிறேன் என்று கூறி, அக்கோயில்களை இடித்து, மீண்டும் கூறியபடி அக்கோயில்களை கட்டிக் கொடுத்தேன். இதுபோன்று பல இடங்களில் மத நம்பிக்கை என்று சொல்லப்பட்ட இடங்களில் அவர்களுக்கு புரிய வைத்து நான் செய்தேன்.
என்று டி.ஆர்.பாலு பேசி இருப்பதை காண முடிந்தது.
அரசு திட்டங்களுக்காக கோயில், மசூதி, கிறித்தவ ஆலயங்களை இடித்து, அதை மக்களுக்கு புரிய வைத்து, அவற்றை மீண்டும் கட்டிக் கொடுத்ததாக டி.ஆர்.பாலு பேசியதை திரித்து, மசூதி, மாதா கோயில் போன்ற வார்த்தைகளை நீக்கி, இந்து கோயில்களை இடித்ததை டி.ஆர்.பாலு பெருமையாக பேசியதாக சமூக வலைத்தளங்களில் தவறாக பரப்பப்பட்டு வருகின்றது என்பது மேற்காணும் வீடியோவின் மூலம் தெளிவாகின்றது.
Also Read: பிரதமர் குறித்த ஆவணப்படத்தை தயாரித்த பிபிசி தயாரிப்பாளரை ராகுல் காந்தி சந்தித்தாரா?
Conclusion
திமுக பொருளாளர் டி.ஆர் பாலு 100 வருட கோயிலை இடித்தேன் என்று பெருமை பேசியதாக பாஜகவினர் சமூக வலைத்தளங்களில் பரப்பிய வீடியோ எடிட் செய்யப்பட்டது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Altered Video
Sources
Youtube Video from News 18 Tamilnadu dated Jan 27, 2023
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)