Fact Check
CM’s Foreign Trip: ஜெர்மனியில் முதலீடுகளை ஈர்க்கும் லட்சணம் என்று பரவும் வீடியோவின் உண்மைத்தன்மை!
Claim
ஜெர்மனியில் முதலீடுகளை ஈர்க்கும் லட்சணம் என்று பரவும் வீடியோ.
Fact
வைரலாகும் வீடியோவுக்கும் முதலமைச்சரின் அண்மைய பயணத்துக்கும் தொடர்பில்லை. இவ்வீடியோ சென்ற ஆண்டு சான் ஃபிரான்சிஸ்கோவில் எடுக்கப்பட்டதாகும்.
முதலமைச்சர் ஸ்டாலின் ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகளில் சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு இன்று சென்னை திரும்பினார். இந்நிலையில் “ஜெர்மனியில் முதலீடுகளை ஈர்க்கும் லட்சணம்” என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.
அவ்வீடியோவில் அமெரிக்க பாடகர் டோனி பென்னட் சிலைக்கு முன்பு முதலமைச்சர் அவரது மனைவியுடன் சேர்ந்து புகைப்படம் எடுப்பதாக இருந்தது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: முதலமைச்சர் ஸ்டாலின் வணங்கிய திருவள்ளுவர் சிலை திருநீர் அணிந்திருந்ததா?
Fact Check/Verification
ஜெர்மனியில் முதலீடுகளை ஈர்க்கும் லட்சணம் என்று பரப்பப்படும் வீடியோவில் காணப்படும் பகுதி குறித்து தேடியதில் அவ்விடம் ஜெர்மனியில் இல்லை; கலிஃபோர்னியாவில் உள்ள சான் ஃபிரான்சிஸ்கோ நகரத்தில் உள்ளது என அறிய முடிந்தது.
வைரலாகும் வீடியோவில் காணப்படும் டோனி பென்னட் சிலை சான் ஃபிரான்சிஸ்கோவில் உள்ள ஃபேர்மோண்ட் ஹோட்டலில் உள்ளது. இச்சிலையை 2016 ஆம் ஆண்டில் டோனி பென்னட்டே திறந்து வைத்துள்ளார்.

தொடர்ந்து தேடுகையில் வைரலாகும் இதே வீடியோ சென்ற ஆண்டே (2024) சமூக ஊடகங்களில் வைரலானதை அறிய முடிந்தது.

இதனையடுத்து தேடுகையில் ‘அமெரிக்காவில் Tony Bennett சிலை முன்பு ஸ்டாலின் உற்சாக போஸ்.! ஆல்பம் இதோ’ என்று குறிப்பிட்டு ஏசியாநெட் நியூஸ் தமிழில் செப்டம்பர் 3, 2024 அன்று செய்தி வெளியிட்டிருப்பதை காண முடிந்தது.
அச்செய்தியில் முதலமைச்சர் ஸ்டாலின் சான் ஃபிரான்சிஸ்கோவில் டோனி பென்னட் சிலை முன்பு புகைப்படம் எடுத்துக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

தொடர்ந்து தேடுகையில் மின்னம்பலம் ஊடகத்தில் செப்டம்பர் 3, 2024 அன்று வெளியிடப்பட்டிருந்த செய்தியிலும் இதே தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து தேடுகையில் திமுகவின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் முதலமைச்சர் அவரது அமெரிக்கப் பயண அனுபவங்களைக் கடிதத் தொகுப்புகளாக எழுதுகிறார் என்று குறிப்பிட்டு பதிவு ஒன்றை செப்டம்பர் 16, 2024 அன்று பதிவிட்டிருப்பதை காண முடிந்தது.
அப்பதிவில் ஃபேர்மோண்ட் ஹோட்டலின் வாசலில் இருந்த டோனி பென்னட் சிலை முன்பு படம் எடுத்துக்கொண்டதாக மு.க.ஸ்டாலின் எழுதியிருப்பதை காண முடிந்தது.

Also Read: எஸ்.சி, எஸ்.டி உள்பட எந்த ஜாதிக்கும் இட ஒதுக்கீடு அவசியம் இல்லை என்றாரா பிரேமலதா விஜயகாந்த்?
Conclusion
ஜெர்மனியில் முதலீடுகளை ஈர்க்கும் லட்சணம் என்று பரப்பப்படும் வீடியோவுக்கும் முதலமைச்சரின் அண்மைய வெளிநாட்டு பயணத்திற்கும் தொடர்பில்லை. அவ்வீடியோ சென்ற ஆண்டு சான் ஃபிரான்சிஸ்கோவில் எடுக்கப்பட்டதாகும்.
இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
Media report by Billboard, dated August 20, 2016
X Post by the user, @Shibin_twitz, dated September 3, 2024
Media report by Asianet News Tamil, dated September 3, 2024
Media report by Minnambalam, dated September 3, 2024
Facebook Post by DMK’s Official Page, dated September 16, 2024