அரசு புத்தகப் பைகளில் முன்னாள் முதல்வர்கள் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஜெயலலிதா படங்கள் நீக்கப்பட்டு முதல்வர் ஸ்டாலின் படம் மாற்றப்பட்டதாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

பொதுவாக ஒரு கட்சி ஆட்சியில் இருக்கும்போது அக்கட்சித் தலைவர்களின் படமே அரசு தொடர்பான திட்டங்கள் மற்றும் இலவசங்களில் இடம்பெறும். மாற்றுக்கட்சி ஆட்சிக்கு வரும்போது பழைய தலைவர்களின் படங்களை நீக்கி விட்டு தங்கள் கட்சி தலைவர்களின் படங்களை அதில் இடம்பெறச் செய்வர்.
ஆனால் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் முதல்வர் ஸ்டாலின் மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக வழங்கும் புத்தகைப் பைகளில் ஏற்கனவே அச்சிடப்பட்டிருந்த முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிசாமி படங்களை மாற்ற வேண்டாம் என்று உத்தரவிட்டார்.
இந்த உத்தரவானது அரசியல் அரங்கில் அவருக்கு புதிய மரியாதையையும் மதிப்பையும் பெற்று தந்தது. ஆனால் தற்போது அரசு புத்தகப் பைகளில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஜெயலலிதா படங்கள் நீக்கப்பட்டு முதல்வர் ஸ்டாலின் மற்றும் கனிமொழி உள்ளிட்டோர் படம் இடம்பெற்றிருப்பதாக புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
வைரலாகும் அப்படத்தில் திமுக எம்.பி.யான கனிமொழி கருணாநிதி அவர்கள் முதல்வர் ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்டோர் அடங்கிய புகைப்படத்தை தாங்கிய புத்தக பையை மாணவி ஒருவருக்கு வழங்குவதாய் காட்சி அமைந்துள்ளது.



Also Read: திமுகவை எதிர்ப்பதற்கு திருமாவளவனுக்கு தைரியம் இல்லை என்றாரா வன்னி அரசு?
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact check/ Verification
அரசு புத்தகப் பைகளில் முன்னாள் முதல்வர்கள் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஜெயலலிதா படங்கள் நீக்கப்பட்டு ஸ்டாலின் படம் மாற்றப்பட்டதாக தகவல் பரவியதைத் தொடர்ந்து, இத்தகவலுக்கு ஆதாரமாக விளங்கும் புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி ஆய்வு செய்தோம்.
இந்த ஆய்வில் இப்படமானது அரசு நிகழ்வில் எடுக்கப்பட்டதல்ல, திமுக சார்பில் நடைப்பெற்ற தனியார் நிகழ்வில் எடுக்கப்பட்டது என்கிற உண்மை நமக்கு தெரிய வந்தது.
திருவள்ளூர் மேற்கு மாவட்ட மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் கோவிந்தம்மா ஒருங்கிணைப்பில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் 500 மகளிருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
இதில் கனிமொழி கலந்துக்கொண்டு நலத்திட்டங்களை வழங்கியதுடன், இந்நிகழ்வில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அப்புகைப்படங்களில் ஒரு படத்தை பயன்படுத்தியே மேற்கண்ட தகவல் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகின்றது.
திமுக சார்பில் நடத்தப்பட்ட தனியார் நிகழ்வில் வழங்கப்பட்ட புத்தகப் பைகளை, தமிழக அரசு சார்பில் வழங்கப்பட்ட புத்தகப்பைகள் என்று தவறாகப் புரிந்துக்கொள்ளப்பட்டு, அரசு புத்தகப் பைகளில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஜெயலலிதா படங்கள் நீக்கப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் தவறானத் தகவல் பரப்பப்படுகின்றது என்பது மேற்கண்ட ஆய்வின் தெளிவாக உணர முடிகின்றது.
Also Read: பேச்சாளர்களுக்கு முந்திரி, இறைச்சி வாங்க நிதி கேட்டதா நாதக?
Conclusion
அரசு புத்தகப் பைகளில் முன்னாள் முதல்வர்கள் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஜெயலலிதா படங்கள் நீக்கப்பட்டு முதல்வர் ஸ்டாலின் படம் மாற்றப்பட்டதாக பரவும் தகவல் தவறானது என்பதை உரிய ஆதாரங்களுடன் விளக்கியுள்ளோம்.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Partly False
Our Sources
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)