Authors
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.
Claim: பாகிஸ்தானில் பாலியல் வன்கொடுமையைத் தடுக்க இறந்த பெண்களின் கல்லறைகளுக்கு பூட்டு
Fact: வைரலாகும் புகைப்படம் ஹைதராபாத்தைச் சேர்ந்ததாகும்; செய்திக்கும், புகைப்படத்திற்கும் தொடர்பு இல்லை.
பாகிஸ்தானில் இறந்த பெண்களின் கல்லறைக்கு பூட்டு போடும் பெற்றோர் என்று புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவுகிறது.
பச்சை நிறத்தில் இரும்புக்கிராதி போட்ட கல்லறை ஒன்றின் புகைப்படத்துடன், இறந்த பெண்களின் கல்லறைகளுக்கு பூட்டு போட்ட பெற்றோர் என்கிற தகவல் சமூக வலைத்தளங்களிலும், முன்னணி செய்தி நிறுவனங்களாலும் பகிரப்பட்டு வருகிறது. ANI, TV9 Bharatvarsh, Vikatan, Raj News Tamil உள்ளிட்ட பலரும் இப்புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர்.
முதலில், பாகிஸ்தானில் இறந்த பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக செய்தி ஏதேனும் வந்துள்ளதா என்று ஆராய்ந்தபோது பாகிஸ்தானைச் சேர்ந்த Daily Times என்கிற செய்தி இணையதளம் இப்படி ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது. ஆனால், அச்செய்தியில் புகைப்படங்களோ, வீடியோவோ இடம்பெற்றிருக்கவில்லை.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: Fact Check: நொச்சிக்குப்பம் மீன் விற்பனைக் கடைகள் இடிக்கப்பட்டதாகப் பரவும் புகைப்படம் உண்மையா?
Fact Check/Verification
பாகிஸ்தானில் இறந்த பெண்களின் கல்லறைகளுக்கு பூட்டு போடும் பெற்றோர் என்று பரவும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவிய நிலையில் அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
முதலில், குறிப்பிட்ட புகைப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உள்ளாக்கினோம். ஆனால், நமக்கு அத்தேடலில் முடிவுகள் ஏதும் கிடைக்கவில்லை. எனினும், இது தொடர்பான பிற மொழிப்பதிவுகளின் கீழ் குறிப்பிட்ட புகைப்படம் ஹைதராபாத்தைச் சேர்ந்தது என்கிற பின்னூட்டத்தை பரவலாக காண முடிந்ததது.
நம்முடைய தேடலின் முடிவில், Jaleelraja Abu AbudulHadee என்கிறவர் சமூகவலைத்தளத்தில் வெளியிட்டிருந்த பதிவொன்று நமக்குக் கிடைத்தது. ஏப்ரல் 30, 2023 அன்று அவர் வெளியிட்ட இப்பதிவில் குறிப்பிட்ட கல்லறை Durab Jan Colony, Madnapet, Masjid Salar-e-Malik என்று குறிப்பிட்டுள்ளார். குறிப்பிட்ட வைரல் புகைப்படத்தில் இருக்கும் கல்லறைக்கு நேரில் சென்று அப்புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.
இதனை மேலும் உறுதி செய்ய, குறிப்பிட்ட கல்லறை மற்றும் மசூதியை Google Earth மூலமாகத் தேடினோம். அப்போது, குறிப்பிட்ட பயனர் ஷேர் செய்துள்ள அதே கல்லறையை நம்மால் கண்டறிய முடிந்தது. அது வைரல் புகைப்படத்துடன் ஒத்திருந்தது.
தொடர்ந்து, இதுகுறித்து மேலும் அறிய முகமது ரசூல் ரஹீம் என்கிற நம்முடைய ஊடக நண்பர் ஒருவரைத் தொடர்பு கொண்டபோது, அவர் ஜலீல் என்பவரது எண்ணை நமக்கு அளித்தார். அந்த எண்ணுக்குரியவரே சமூக வலைத்தளப்பக்கத்தில் நாம் கண்டறிந்த விளக்கப்பதிவின் Jaleelraja Abu AbudulHadee என்பதை அறிந்துகொண்டோம்.
அவரிடம் பேசியபோது, இரவில் சமூக வலைத்தளத்தில் அவர் பதிவுகளைப் பார்த்துக் கொண்டிருந்தபோது குறிப்பிட்ட கல்லறையின் புகைப்படம் பாகிஸ்தானில் எடுக்கப்பட்டது என்று பகிரப்பட்டதாகவும், உடனடியாக அதுகுறித்து அறிந்து கொள்ள இரவு 2 மணிக்கே ஹைதராபாத் Madnapet மசூதியில் அமைந்துள்ள கல்லறைக்குச் சென்று புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்ததாகவும் தெரிவித்தார்.
வைரலாகிய கல்லறைக்கு அருகில் உள்ள கடையான ஜஹாங்கீர் டெய்ரியுடன் தொடர்பு கொண்டு நாம் பேசியபோது, குறிப்பிட்ட கல்லறை அவர்களுடைய கடைக்கு பக்கத்தில் உள்ள மசூதியில் அமைந்துள்ளது என்று உறுதி செய்தனர். மசூதியின் கல்லறைத்தோட்ட ஆரம்பத்திலேயே இறந்த பெண்ணின் கல்லறை அமைந்திருப்பதால் அதன்மேல் மிதித்து மக்கள் செல்லாமல் இருக்கவும், அதன்மேலேயே மற்றொரு கல்லறையை மற்றவர்கள் எழுப்பாமல் இருக்கவும் இருப்புக்கிராதி மற்றும் பூட்டு போட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். இதன்மூலமாக, குறிப்பிட்ட கல்லறை ஹைதராபாத்தைச் சேர்ந்தது என்பது உறுதியாகிறது.
வைரலாகும் கல்லறை புகைப்படத்தின் உண்மையறிய மேலும் ஆராய்ந்தபோது Deccan 24 Hyderabad வெளியிட்டிருந்த குறிப்பிட்ட கல்லறைக்குச் சொந்தமான குடும்பத்தின் பதில் நமக்குக் கிடைத்தது. அதில், கல்லறையின் மீது குப்பைகள் வீசப்படாமல் இருக்க இரும்புக்கிராதி அமைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read: Fact Check: கர்நாடகாவில் ஓட்டுக்கு பணம் தந்ததா பாஜக?
Conclusion
பாகிஸ்தானில் இறந்த பெண்களின் கல்லறைகளுக்கு பூட்டு போடும் பெற்றோர் என்று பரவும் புகைப்படம் ஹைதராபாத்தைச் சேர்ந்தது என்பதும், கல்லறையில் குப்பைகள் சேராமல் இருக்கவும், மற்றவர்கள் மிதித்து செல்லாமல் இருக்கவுமே இரும்புக்கிராதி அமைக்கப்பட்டுள்ளது என்பதும் நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources
Facebook post by jaleel.raja on 30 april 2023, 02:09PM
Google Earth search
Conversation with local residents and Social workers
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Authors
Vijayalakshmi leads our Tamil team. She’s worked in the media industry for more than eight years. This includes her work as a senior correspondent for Times Now before joining Newschecker. She turned to fact-checking to create awareness around misinformation through her writing.