பாலமேடு ஜல்லிக்கட்டில் தலித் சமூகத்தினர் மாடுகள் தாக்கப்பட்டதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

மதுரை அலங்காநல்லூர் பாலமேட்டில் வருடா வருடம் நடக்கும் ஜல்லிக்கட்டு உலக பிரசித்தி பெற்றதாகும். அதில் இந்த வருடம் நடந்த பாலமேடு ஜல்லிக்கட்டில் தலித் சமூகத்தினர் மாடுகள் கலந்துக் கொள்ளக் கூடாது என்று கூறி அவர்களின் மாடுகள் தாக்கப்பட்டதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.



Also Read: ‘ஆசிரியர்களுக்கு தொகுப்பு ஊதியம் வழங்கப்பட மாட்டாது’ என்றாரா அன்பில் மகேஷ்?
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact check/ Verification
பாலமேடு ஜல்லிக்கட்டில் தலித் சமூகத்தினர் மாடுகள் தாக்கப்பட்டதாக வீடியோ ஒன்று வைரலானதை தொடர்ந்து அதுகுறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
நம் ஆய்வில் வைரலாகும் வீடியோவில் காணப்படும் சம்பவம் உண்மையானது என்பதும், ஆனால் அதுக்கு கொடுக்கப்பட்ட காரணம் முற்றிலும் பொய்யானது என்பதும் தெரிய வந்தது.
மாட்டு பொங்கலன்று ( 15/01/2022) ஜல்லிக்கட்டில் கலந்துக்கொள்ள காளைகள் வரிசையாக நின்றுக் கொண்டிருந்தபோது கூட்ட நெரிசல் காரணமாக பவுன் என்பரின் காளை மீது மற்றொரு காளையின் கொம்பு குத்தி சிறுகாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த பவுன் மற்ற மாடுகளையும் அதன் உரிமையாளர்களையும் கம்பால் தாக்கியுள்ளார்.
இந்த வீடியோவே சமூக வலைத்தளங்களில் தலித் சமூகத்தினர் மாடுகள் தாக்கப்பட்டதாக கூறி பொய்யாக பரப்பப்படுகின்றது.
இச்சம்பவம் குறித்து மதுரை போலீசார் பத்திரிக்கைகளுக்கு அளித்த அறிக்கையில்,
மதுரை மாவட்டத்தில் தைப்பொங்கலை முன்னிட்டு கடந்த 15.01.22 அன்று பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி மிகச்சிறப்பாக நடைபெற்றது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியின் போது அரசு விதித்துள்ள நடைமுறைகளை பின்பற்றி ஜல்லிக்கட்டு போட்டிக்கு தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மதுரை மாவட்ட காவல் துறையின் சார்பாக சிறப்பாக மேற்கொள்ளப்பட்டது.
மாவட்ட நிர்வாகத்தின் மூலம் இப்போட்டியில் கலந்து கொள்வதற்கு காளைகளுக்கு டோக்கன்கள் வழங்கப்பட்டன. அவ்விதம் டோக்கனுடன் வந்திருந்த காளைகளை முறையாக வரிசைப்படுத்தி வாடி வாசலுக்குள் அனுப்பப்பட்டது.
இந்நிலையில் மேற்படி ஜல்லிக்கட்டு போட்டியில் கலந்து கொள்ள உரிய டோக்கன் உடன் தன்னுடைய காளையுடன் வந்திருந்த மதுரை மாவட்டம் கீழ சின்னனம்பட்டியைச் சேர்ந்த முத்து மகன் பவுன் என்பவர் தன்னுடைய காளையை வரிசையில் நிற்க வைக்க முயன்ற போது அவருக்கு பின்னால் இருந்தவர்கள் அவரை முந்திக்கொண்டு செல்ல முற்பட்டதால் அங்கு ஏற்பட்ட சிறு நெரிசல் காரணமாக வரிசையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்றொரு காளை மேற்படி பவுன் என்பவரின் காளை மீது கொம்பால் குத்தி உள்ளது. இதனால் மேற்படி பவுனின் காளைக்கு சிறு காயம் ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த மேற்படி பவுன் என்பவர் அங்கு நின்று இருந்த மற்ற காளைகளையும், அதன் உரிமையாளர்களையும் அங்கு இருந்த கம்பை எடுத்து தாக்கியுள்ளார் இது குறித்த தகவல் கிடைத்தவுடன் அங்கு பணியில் இருந்த காவல் அதிகாரிகள் உடனடியாக சென்று நிலைமையை சீர் செய்து வரிசைப்படுத்தினார்கள். இச்சம்பவத்தில் எந்தக் காளைக்கும் மற்றும் காளையின் உரிமையாளர் எவருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை. காயம்பட்ட பவுன் என்பவரின் காளைக்கு முதலுதவி செய்யப்பட்டு காளை வெற்றிகரமாக வாடி வாசலை கடந்து சென்றது.
இதில் சுமார் 702 காளைகள் வாடி வாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டது. இருப்பினும் மேற்படி பவுன் என்பவர் காளைகளை தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது.
பின்பு இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டி பாலமேடு ஜல்லிக்கட்டு கமிட்டியின் உறுப்பினர் கொடுத்த புகாரின் பேரில் மேற்படி பவுன் என்பவர் மீது பாலமேடு காவல்நிலையத்தில் பிரிவு 11 (1) (a) தமிழ்நாடு விலங்கு வதைச் தடுப்புச் சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, மேற்படி பவுன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுக்குறித்து மற்ற ஊடகங்களில் வந்த செய்தியினை இங்கே, இங்கே, மற்றும் இங்கே காணலாம்.
Also Read: தமிழக அலங்கார ஊர்தியில் கருணாநிதி சிலை இடம்பெற்றதால் நிராகரிக்கப்பட்டதா?
Conclusion
பாலமேடு ஜல்லிக்கட்டில் தலித் சமூகத்தினர் மாடுகள் தாக்கப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல் முற்றிலும் பொய்யானது என்பதை உரிய ஆதாரங்களுடன் விளக்கியுள்ளோம்.
சாதாரணமாக நடந்த ஒரு நிகழ்வுக்கு சாதிச் சாயம் பூசி ஒற்றுமையாய் வாழும் மக்களிடையே கசப்பையும் வெறுப்பையும் உருவாக்க நினைக்கும் இதுபோன்ற விஷம பதிவுகளை மக்கள் நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
Our Sources
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)