Fact Check
அமைச்சர் ஐ.பெரியசாமி வீட்டில் ரெய்டு.. டெல்லிக்கு பறந்த ஸ்டாலின்.. வைரலாகும் நியூஸ்கார்டு உண்மையானதா?
Claim
அமைச்சர் ஐ.பெரியசாமி வீட்டில் ரெய்டு வந்த தினத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லிக்கு சென்றார்.
Fact
வைரலாகும் நியூஸ்கார்டு போலியானதாகும். நியூஸ் 18 தமிழ்நாடு தரப்பு இதை தெளிவு செய்துள்ளது.
திமுக அமைச்சர் ஐ.பெரியசாமி, அவரது மகன் மற்றும் மகளின் வீட்டில் நேற்றைய முன்தினம் (ஆகஸ்ட் 16) அமலாக்கத்துறை சோதனையில் ஈடுபட்டது.
இந்நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் இரண்டு நாட்கள் பயணமாக நேற்றைய முன்தினம் டெல்லிக்கு புறப்பட்டு சென்றதாக நியூஸ்கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் பரவியுள்ளது. டெல்லி செல்லும் முதலமைச்சர் பிரதமர் மோடியை சந்திக்கவிருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: பொதுக்கூட்டத்தில் சீமான் பின்னணி ஒலிக்கு வாயசைத்ததாக பரவும் எடிட் வீடியோ!
Fact Check/Verification
அமைச்சர் ஐ.பெரியசாமி வீட்டில் ரெய்டு வந்த தினத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லிக்கு சென்றதாக நியூஸ்கார்டு ஒன்று பரவியதை தொடர்ந்து இதுக்குறித்து ஆராய்ந்தோம்.
முன்னதாக நியூஸ்கார்டில் குறிப்பிட்டுள்ள ஆகஸ்ட் 16 மற்றும் ஆகஸ்ட் 17 ஆகிய இரண்டு தினங்களில் முதலமைச்சர் ஸ்டாலின் டெல்லியில் இருந்தாரா என்று ஆராய்ந்தோம்.
அதில் ஆகஸ்ட் 16 ஆம் தேதி மறைந்த நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் உடலுக்கு சென்னையில் முதலமைச்சர் ஸ்டாலின் அஞ்சலி செலுத்திதாக தமிழ்நாடு முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதை காண முடிந்தது.

தொடர்ந்து தேடுகையில் ஆகஸ்ட் 16 ஆம் தேதி சேலத்தில் நடந்த சி.பி.ஐ மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துக்கொண்டு உரையாற்றிய வீடியோ பாலிமர் நியூஸ் யூடியூப் பக்கத்தில் நேரலையாக வெளியிடப்பட்டிருந்ததை காண முடிந்தது.
இதனையடுத்து தேடுகையில் ஆகஸ்ட் 17 ஆம் தேதி (பிரதமரை சந்திக்கவிருப்பதாக குறிப்பிடப்பட்ட தினம்) தருமபுரியில் நடைபெற்ற அரசு விழாவில் பல்வேறு துறைகளின் சார்பில் 70,427 பயனாளிகளுக்கு ரூ. 830.06 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கியதாக தமிழ்நாடு முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதை காண முடிந்தது.
இவ்விழாவில் முதலமைச்சர் மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களை வழங்கியதாகவும், தோட்டக்கலை இயந்திரங்கள், சிறுதானியங்கள் மற்றும் உயிர்ம வேளாண்மை கண்காட்சியினை தொடங்கி வைத்து, பார்வையிட்டதாகவும் அப்பதிவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து இப்பக்கத்தின் மற்றொரு பதிவில் முதலமைச்சர் தர்மபுரியில் முன்னாள் ஒன்றிய அமைச்சர் முரசொலி மாறன் பிறந்தநாளையொட்டி அவரது படத்திற்கு மாலையிட்டு மரியாதை செலுத்தியதாகவும் பதிவிடப்பட்டிருந்ததை காண முடிந்தது.

இதன்படி பார்க்கையில் முதலமைச்சர் நியூஸ்கார்டில் குறிப்பிட்டுள்ள இரண்டு தினங்களில் டெல்லிக்கு செல்லவில்லை என உறுதியாகின்றது. அதுவும் பிரதமரை சந்திக்கவிருப்பதாக குறிப்பிடப்பட்ட தினத்தில் அவர் தர்மபுரியில் அரசு விழாவில் கலந்துக்கொண்டுள்ளார்.
தொடர்ந்து தேடுகையில் தமிழ்நாடு அரசின் தகவல் சரிப்பார்ப்பகமும் இத்தகவல் தவறானது என்று அதன் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதை காண முடிந்தது.

இதனையடுத்து வைரலாகும் நியூஸ்கார்டானது நியூஸ் 18 தமிழ்நாட்டின் நியூஸ்கார்ட் டெம்ப்ளேட்டை பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருப்பதால் அந்நிறுவனம் இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை வெளியிட்டதா என அதன் சமூக ஊடகப் பக்கங்களில் தேடினோம்.
இத்தேடலில் நியூஸ் 18 தமிழ்நாடு இவ்வாறு ஒரு செய்தியை வெளியிட்டிருக்கவில்லை.
இதனையடுத்து நியூஸ் 18 தமிழ்நாட்டின் டிஜிட்டல் பொறுப்பாளர் அனுவை தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்டு குறித்து விசாரித்தோம். அவர் வைரலாகும் நியூஸ்கார்டு போலியானது என்று தெரிவித்தார்.
Also Read: தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் இருந்து தெறித்து ஓடிய தவெகவினர் என்ற வீடியோ உண்மையா?
Conclusion
அமைச்சர் ஐ.பெரியசாமி வீட்டில் ரெய்டு வந்த தினத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லிக்கு சென்றதாக பரவும் தகவல் தவறானதாகும்.
இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
X post by CMO Tamil Nadu, dated August 16, 2025
Live-streamed video by Polimer News, dated August 16, 2025
X post by CMO Tamil Nadu, dated August 17, 2025
X post by CMO Tamil Nadu, dated August 17, 2025
X post by TN Fact Check, dated August 16, 2025
Phone Conversation with Anu, News 18 Tamil Nadu