இலங்கையை இந்தியாவின் மாநிலமாக்குவோம் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியதாக தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

“இலங்கை வாழ் மக்கள் விரும்பினால் இலங்கையை இந்தியாவின் ஒரு மாநிலமாக அறிவிக்க தயாராக உள்ளோம். அத்துடன் இலங்கையில் தற்போது இருக்கும் நெருக்கடிகளான பெட்ரோல், டீசல், எரிவாயு, உணவுப்பொருட்கள் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்து அதன் விலைகளை குறைப்போம்.
மேலும் இலங்கையில் இருக்கக்கூடிய கடன் பிரச்சனைகள், தொழில் பிரச்சனைகள் போன்ற விஷயங்களையும் தீர்த்து வைக்க படிப்படியாக நடவடிக்கைகள் எடுக்க தயாராக உள்ளோம் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தனது டிவிட்டர் கணக்கு மூலம் இலங்கை மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்” என்று தினமலர் செய்தி வெளியிட்டதாக கூறி தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.



Also Read: ராசு வன்னியர் என்று வழித்தடம் ஒன்றிற்கு பெயரிட்டதா கலிஃபோர்னியா அரசு?
சமூக வலைத்தளங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Fact Check/Verification
இலங்கையை இந்தியாவின் மாநிலமாக்குவோம் என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியதாக தகவல் ஒன்று வைரலானதை தொடர்ந்து இதுக்குறித்த ஆய்வில் ஈடுபட்டோம்.
முன்னதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் மேற்கண்ட கருத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டாரா என தேடினோம். இத்தேடலில் ஜெய்சங்கர் அவர்கள் இவ்வாறு பதிவிட்டதற்கான எந்த ஒரு தரவும் கிடைக்கவில்லை.
இதனையடுத்து மேலும் தேடுகையில், இலங்கையிலிருக்கும் இந்திய உயர் ஸ்தானிகராலயம் அதன் அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கங்களில் வைரலாகும் இத்தகவலை மறுத்து மறுப்பு பதிவு ஒன்றை வெளியிட்டிருந்ததை காண முடிந்தது.
அப்பதிவில், “இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர் அவர்களின் ருவிட்டர் கணக்கிற்குரியதென காண்பிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட போலியான படம் தொடர்பாக நாம் அறிந்துள்ளோம். இது முழுக்க முழுக்க போலியானதும் புனையப்பட்டதுமாகும். தீய எண்ணத்துடனான இதன் உள்ளீடுகளை நாம் கடுமையாக மறுக்கின்றோம். இந்தியா இலங்கை இடையில் காணப்படும் நட்புரீதியானதும், நெருக்கமானதும், தொன்மையானதுமான உறவை பாதிக்கும்வகையில், அவநம்பிக்கை கொண்ட தரப்பினரால் மேற்கொள்ளப்படும் தீய நோக்கத்துடனான இம்முயற்சிகள் ஒருபோதும் வெற்றியடையப்போவதில்லை” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனையடுத்து வைரலாகும் செய்தியை தினமலர் வெளியிட்டதா என்பதை ஆய்வு செய்தோம். இச்செய்தியில் பயன்படுத்தப்பட்டுள்ள டிசைன், ஃபாண்ட் (எழுத்துரு), எழுத்துப்பிழை (பெட்ரோல் என்பதற்கு பதிலாக பெற்றோல் என்று எழுதப்பட்டுள்ளது) போற்றவற்றை காணும்போதே இது போலியாக உருவாக்கப்பட்ட செய்தி என்பதை உணர முடிகின்றது.
இருப்பினும் பலர் இதை உண்மை என்று பகிர்ந்து வருவதால் இச்செய்தியை தினமலர் வெளியிட்டதா என்று தேடினோம். வைரலாகும் படத்தில் இச்செய்தியானது கடந்த புதனன்று (20/04/2022) முகப்பு பக்கத்தில் வெளிவந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆகவே இத்தேதியில் தினமலர் முகப்பு பக்கத்தில் என்ன செய்தி வந்தது என்று தேடினோம். இதில் வைரலாகும் செய்தி இல்லாமல் வேறு செய்தி இடம்பெற்றிருந்ததை காண முடிந்தது.

இதனடிப்படையில் பார்க்கும்போது தினமலரில் வைரலாகும் செய்தி வெளியிடப்படவில்லை என்பது உறுதியாகின்றது. வாசகர்களின்களின் புரிதலுக்காக தினமலரின் உண்மையான முகப்பு பக்கத்தையும், போலி முகப்பு பக்கத்தையும் கீழே ஒப்பிட்டுக் காட்டியுள்ளோம்.


Also Read: சுதந்திர இந்தியாவின் முதல் இப்தார் விருந்து என்று பரவும் புகைப்படம் உண்மையானதா?
Conclusion
இலங்கையை இந்தியாவின் மாநிலமாக்குவோம் என்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியதாக பரவும் தகவல் முற்றிலும் பொய்யானது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் மூலம் மிகத் தெளிவாக உறுதியாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: False
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)