சித்திரை தமிழ்ப் புத்தாண்டிற்கு தமிழகத்தில் விடுமுறை இல்லை என்று தகவல் ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
”எப்டுறா !!!! இதுக்கு மட்டும் கத்துதா அந்த பல்லி எங்க அது? …. #திராவிடயுகாதி_தமிழ்நாட்டில்அநீதி” என்று பரவும் அந்த புகைப்படத்தில் யுகாதிக்கு விடுமுறை விடப்படும் நிலையில் தமிழ்ப்புத்தாண்டிற்கு மட்டும் விடுமுறை இல்லை என்று தகவல் பரவுகிறது.

சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: அன்புமணி தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் என்று கருத்துக்கணிப்பு வெளியிட்டதா சி வோட்டர்?
Fact Check/Verification
சித்திரை தமிழ்ப் புத்தாண்டிற்கு தமிழகத்தில் விடுமுறை இல்லை என்று பரவும் தகவல் குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
மார்ச் 30ஆம் தேதியன்று யுகாதி எனப்படும் தெலுங்கு வருடப்பிறப்பு கொண்டாடப்பட்ட நிலையில் அண்டை மாநில வேற்றுமொழி வருடப்பிறப்பிற்கு விடுமுறை அளிக்கும் தமிழ்நாடு அரசு, நம்முடைய தமிழ் வருடப்பிறப்பிற்கு விடுமுறை அளிப்பதில்லை என்று இப்புகைப்படம் பரவி வரும் நிலையில், அதுபற்றி ஆய்வு நடத்தினோம்.
வருகின்ற ஏப்ரல் 14ஆம் தேதியன்று சித்திரை தமிழ் புத்தாண்டு வரும் நிலையில், தமிழ்நாடு அரசின் 2025ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை அட்டவணையை அவர்களுடைய அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆராய்ந்தோம்.

அப்போது, வருகின்ற ஏப்ரல் 14ஆம் தேதியன்று “தமிழ்ப்புத்தாண்டு/டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள்” என்று குறிப்பிட்டு அரசாணையில் விடுமுறை இடம்பெற்றுள்ளது. கடந்த ஆண்டும் இதேபோன்று தமிழ்ப்புத்தாண்டு விடுமுறை அரசாணையில் இடம்பெற்றுள்ளது.
திமுக தலைமையிலான அரசு கடந்த 2008 ஆம் ஆண்டு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அறிவித்த படி, தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்பதாக தெரிவித்திருந்த நிலையில், மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தபோது சித்திரை முதல் நாளே தமிழ் புத்தாண்டு என்று முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவினால் மாற்றப்பட்டது. எனினும், இன்றும் தை முதல் நாள், சித்திரை முதல் நாள் வருடப்பிறப்பு சர்ச்சை எழுந்தாலும் கூட இரண்டு நாட்களுமே மக்களிடையே கொண்டாடப்படுவதும், அதற்கு விடுமுறை அளிக்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது.
Also Read: தமிழக பாஜக தலைவராக அண்ணாமலையே தொடர்வார் என பரவும் செய்தி வீடியோ தற்போதையதா?
Conclusion
சித்திரை தமிழ் புத்தாண்டிற்கு தமிழகத்தில் விடுமுறை இல்லை என்று பரவும் தகவல் போலியானதாகும். தமிழ்நாடு அரசு ஏப்ரல் 14ஆம் தேதியன்று தமிழ்ப் புத்தாண்டிற்கு விடுமுறை அளித்துள்ளது என்பது நமக்குக் கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
TN Govt Holiday Circular 2025
TN Govt Holiday Circular 2024
Report from, Deivamurasu, Februry 2008