UPSC தேர்வில் வடமாநிலத்தவர் காப்பியடித்ததாக கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: கூலிங் பீர் கேட்டு டாஸ்மாக் தலைமையகத்தை முற்றுகையிடச் சென்றாரா அண்ணாமலை?
Fact Check/Verification
UPSC தேர்வில் வடமாநிலத்தவர் காப்பியடித்ததாக பரப்பப்படும் வீடியோவில் “சிட்டி லா காலேஜ், பாராபங்கி” என்று வீடியோ எடுப்பவர் கூறுவதை கேட்க முடிந்தது.
இதை அடிப்படையாக வைத்து தேடியதில் வைரலாகும் வீடியோவிலிருந்த காட்சி. புகைப்படங்களுடன் இந்தியா டுடே செய்தி ஒன்று வெளியிட்டிருப்பதை காண முடிந்தது. அச்செய்தியில் உத்திரப்பிரதேச மாநிலத்தின் பாராபங்கி பகுதியில் உள்ள சட்டக் கல்லூரி ஒன்றில் இளங்கலை சட்டப்படிப்பு (LLB) தேர்வில் மாணவர்கள் வெளிப்படையாக காப்பியடித்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
மொத்தம் 26 மாணவர்கள் இச்செயலை செய்ததாகவும், ஆசிரியர்களுக்கு தெரிந்தே இச்செயலை அவர்கள் செய்ததாகவும் இச்செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

தொடர்ந்து தேடுகையில் ஜீ நியூஸ் ஊடகமும் இச்சம்பவம் குறித்து செய்தி வெளியிட்டிருந்ததை காண முடிந்தது. அச்செய்தியிலும் LLB தேர்வின்போதே இச்சம்பவம் நடைப்பெற்றதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து தேடுகையில் ஆஜ் தக் வெளியிட்டிருந்த செய்தியில் வைரலாகும் இவ்வீடியோவை எடுத்து வெளியிட்டவர் பெயர் சிவம் என்றும், இவர் டிஆர்சி சட்டக்கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் சிவம் தேர்வில் காப்பியடிக்க டிஆர்சி கல்லூரியில் ரூ.50,000 கேட்கப்பட்டதாகவும், அவர் இதற்கு மறுப்பு தெரிவிக்கவே, அவருக்கு தேர்வு அனுமதி சீட்டு மறுக்கப்பட்டு, அனுமதி சீட்டு பெற சிட்டி சட்டக்கல்லூரிக்கு செல்லுமாறு கூறிப்பட்டதாகவும், சிட்டி கல்லூரிக்கு சென்றபோது அங்கும் அவருக்கு அனுமதி சீட்டு தர மறுக்கப்பட்டதாகவும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அச்சமயத்தில் மாணவர்கள் தேர்வில் காப்பியடிப்பதை அவர் கண்டதாகவும், அதையே அவர் வீடியோ எடுத்து வெளியிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இவ்வீடியோ வைரலானதையடுத்து டாக்டர் ராம் மனோகர் லோஹியா பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் இச்சம்பவம் குறித்து விசாரிக்க கமிட்டி ஒன்று அமைத்துள்ளதாக ஈடிவி பாரத் வெளியிட்டிருந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அச்செய்தியிலும் இவ்வீடியோவை வெளியிட்டவர் டிஆர்சி சட்டக்கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் சிவம் சிங் எனும் மாணவர் என்றே தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து கடந்த வருடம் பிப்ரவரி 27 அன்று சிட்டி சட்டக் கல்லூரியில் நடந்த தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. சிட்டி கல்லூரிக்கு ரூ.2 லட்சம் அபராதம் விதித்ததோடு, 6 ஆண்டுகளுக்கு அக்கல்லூரி தேர்வு நிலையமாக இருக்க தடையும் விதிக்கப்பட்டுள்ளது. இதுக்குறித்த செய்தி டானிக் பாஸ்கர் இணைய ஊடகத்தில் வெளிவந்திருந்தது.
Also Read: இந்தியில் சரளமாக பேசும் கூகுள் நிறுவன தலைவர் சுந்தர் பிச்சை என்று பரவும் வீடியோ உண்மையா?
Conclusion
UPSC தேர்வில் வடமாநிலத்தவர் காப்பியடித்ததாக பரப்பப்படும் தகவல் தவறானதாகும். உண்மையில் அந்த முறைகேடானது இளங்கலை சட்டப்படிப்பு (LLB) தேர்வில் நடந்துள்ளது.
இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
இந்த செய்தியானது சென்ற வருடம் ஜூலை மாதத்திலேயே நியூஸ்செக்கர் ஆங்கிலத்தில் பிரசுரமாகியுள்ளது.
Sources
Report By India Today, Dated March 1, 2024
Report By Zee News Uttar Pradesh/Uttarakhand, Dated February 27, 2024
YouTube Video By Aaj Tak, Dated February 29, 2024
Report By ETV Bharat, Dated February 28, 2024