தவெக தலைவர் விஜய் செப்டம்பர் 13 முதல் டிசம்பர் 20 வது வரை வார இறுதிகளில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய முடிவு செய்து, கடந்த சனிக்கிழமை அன்று திருச்சியில் சுற்றுப்பயணத்தை தொடங்கினார்.
இந்நிலையில் விஜய் பிரச்சார வாகனத்தில் கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளதாக புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: திருச்சி பரப்புரையில் ‘தொட்டபெட்டா ரோட்டு மேல முட்டை பரோட்டா’ பாடலை பாடினாரா விஜய்?
Fact Check/Verification
விஜய் பிரச்சார வாகனத்தில் கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளதாக பரவும் புகைப்படத்தில் காணப்பட்ட வார்த்தைகள், மற்றும் புகைப்படத்தை காண்கையில் அப்படம் செயற்கை நுண்ணறிவு மூலம் எடிட் செய்யப்பட்டிருக்கலாம் எனும் சந்தேகம் நமக்கு ஏற்பட்டது.

எனவே செயற்கை நுண்ணறிவு படங்களை கண்டறியும் WasitAi இணையத்தளத்தில் வைரலாகும் படத்தை பதிவேற்றி ஆராய்ந்தோம். அந்த ஆய்வில் வைரலாகும் படம் செயற்கை நுண்ணறிவு மூலம் எடிட் செய்யப்பட்டுள்ளது என உறுதியானது.

இதனையடுத்து தேடுகையில் பாலிமர் நியூஸின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “த.வெ.க கொடி வண்ணம்… அண்ணா, எம்ஜிஆர், விஜய் புகைப்படம்… உங்க விஜய் நான் வரேன் வாசகம்… தவெக தலைவர் விஜய் பிரசாரத்திற்காக தயாரான பிரசார வாகனம் இதுதான்..!” என்று குறிப்பிட்டு விஜய் பிரச்சார வாகனத்தின் வீடியோ வெளியிட்டிருப்பதை காண முடிந்தது.
இவ்வீடியோவில் காணப்பட்ட பிரச்சார வாகனத்தில் வைரலாகும் படத்தில் காணப்படுவதுபோல் கம்பி ஏதும் காணப்படவில்லை.

இவ்வீடியோவில் விஜய் பிரச்சார வாகனமானது பல்வேறு கோணங்களில் படம்பிடிக்கப்பட்டிருந்தது.
அதில் ஒரு கோணத்தில் காணப்பட்ட காட்சியை வைரலாகும் படத்துடன் ஒப்பிட்டு பார்க்கையில், அக்காட்சியில் காணப்பட்ட பிரச்சார வாகனத்தை எடிட் செய்தே வைரலாகும் படம் உருவாக்கப்பட்டுள்ளது என அறிய முடிந்தது.


இதனையடுத்து தவெக துணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல்குமாரை தொடர்புக் கொண்டு பேசினோம். அவர் “வைரலாகும் படம் எடிட் செய்யப்பட்டது. உண்மையான பிரச்சார வாகனத்தில் வேலி அமைக்கப்படவில்லை” என்று கூறினார்.
கூடவே ஆதாரத்திற்காக பிரச்சார வாகனத்தின் படங்கள் சிலவற்றை நம்முடன் பகிர்ந்தார்.



Also Read: ‘பொறுப்பை மறந்து பதவி மோகத்தில் இருந்தோம்’.. உண்மையை கூறிய ஸ்டாலின் என்று பரவும் வீடியோ உண்மையானதா?
Conclusion
விஜய் பிரச்சார வாகனத்தில் கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளதாக பரவும் படம் செயற்கை நுண்ணறிவு மூலம் எடிட் செய்யப்பட்டதாகும். உண்மையான வாகனத்தில் வேலி ஏதும் அமைக்கப்படவில்லை.
இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
Instagram Video by Polimer News, dated September 12, 2025
Phone Conversation with C.T.R.Nirmalkumar, Deputy General Secretary, TVK
WasitAi