Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: checkthis@newschecker.in
Fact Check
சோழ இளவரசி குந்தவையின் படம் என்று குறிப்பிட்டு புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
“மலேசிய நாட்டிலுள்ள பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டு இருக்கும் சோழ இளவரசி குந்தவையின் ஒரே அரிய புகைப்படம்! ராஜராஜன் வழி வந்த ஹிந்து சொந்தங்களே இதை அதிகம் ஷேர் செய்து நம் சோழர்களின் பெருமையை நிலைநாட்டுங்கள்.!” என்று குறிப்பிட்டு புகைப்படம் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.
ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: கர்நாடகாவில் நுழைந்தவுடன் இந்துக்கள் உடைக்கு மாறினாரா ராகுல் காந்தி?
குந்தவை என்பவர் கி.பி. பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த சோழ இளவரசியாவார். இவர் தஞ்சை பெரிய கோயிலை கட்டிய இராஜராஜ சோழனின் சகோதரியாவார். இவர் ராஜ ராஜன் சோழன் சோழ நாட்டை ஆளும்போது அவருக்கு அரசியல் ஆலோசனை கொடுப்பவராக திகழ்ந்தார் என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர்.
சோழ இளவரசி குந்தவையின் படம் என்று குறிப்பிட்டு புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, இப்படம் குறித்த உண்மையை அறிய, அப்படத்தை ரிவர்ஸ் சர்ச் முறைக்கு உட்படுத்தி தேடினோம்.
இத்தேடலானது pinterest எனும் இணையத்தளத்திற்கு நம்மை அழைத்து சென்றது. அதில் ‘Portrait of a Seated Girl Wearing Jewellery, from Madras in Tamil Nadu – 1872’ எனும் தலைப்பிட்டு பிரசுரமாகியுள்ளதை காண முடிந்தது. இதனை மொழிப்பெயர்த்தால், 1872 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் மெட்ராஸில் நகைகளுடன் அமர்ந்திருக்கும் பெண்ணின் படம் என்று பொருள்படும்.
Pinterest தளத்தில் இப்படம் ‘ஓல்ட் இந்தியன் போட்டோஸ்’ தளத்திலிருந்து பெறப்பட்டது என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ‘ஓல்ட் இந்தியன் போட்டோஸ்’ தளத்தில் இப்படத்தின் மூலம் (Source) பிரிட்டிஷ் லைப்ரரி என்று குறிப்பிடப்பட்டிருந்ததை காண முடிந்தது. ஆகவே பிரிட்டிஷ் லைப்ரரியின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் இப்படம் குறித்து தேடினோம். அதில் ‘Madras girl wearing jewellery, from the International Exhibition of 1872’ என்று தலைப்பிட்டு வைரலாகும் படம் இடம்பெற்றிருந்ததை காண முடிந்தது.
பிரிட்டிஷ் லைப்ரரி தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களின் அடிப்படையில் காண்கையில், வைரலாகும் படம் 1872 ஆம் ஆண்டு தமிழ்நாடின் மெட்ராஸில் எடுக்கப்பட்டதென்பதும், இப்படமானது 1850ல் தொடங்கப்பட்ட மெட்ராஸ் ஸ்கூல் ஆஃப் இண்டஸ்ட்ரியஸ் ஆர்ட்ஸுக்கு சொந்தமானது என்பதும், திருமண நாளில் இந்தியப் பெண்கள் அணியும் புடவை, நகைகள் குறித்து விளக்க இப்படம் எடுக்கப்பட்டுள்ளது என்பதும் தெரிய வருகின்றது.
இதனடிப்படையில் பார்க்கையில் வைரலாகும் படத்திலிருக்கும் பெண் 19-ஆம் நூற்றாண்டை சேர்ந்தவர் என்பதும், அவர் புகைப்படங்களுக்கு மாடலாக பயன்படுத்தப்படும் பெண்ணாக இருக்கலாம் என்பதும் தெளிவாகின்றது. 19-ஆம் நூற்றாண்டை சேர்ந்த இவர் பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த குந்தவையாக இருக்க வாய்ப்பே இல்லை என்பதும் உறுதியாகின்றது.
Also Read: பெண்கள் விரும்பினால் இலவசப் பேருந்துகளில் பணத்தை தந்து டிக்கெட் பெறலாம் என்றதா போக்குவரத்து கழகம்?
சோழ இளவரசி குந்தவையின் படம் என்று குறிப்பிட்டு சமூக வலைத்தளங்களில் வைரலாகும் புகைப்படம் தவறான ஒன்று நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகின்றது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)
Ramkumar Kaliamurthy
December 29, 2021
Komal Singh
October 4, 2024
Ramkumar Kaliamurthy
August 2, 2024