சிவகங்கை இளைஞர் அஜித்குமார் மரணமடைந்ததை தொடர்ந்து, உடற்கூறு ஆய்வுக்குப்பின் 5 போலீசார் மீது கொலை வழக்கு பதியப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சிக்கு ஆதரவாகவும், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக ஆட்சிக்கு எதிராகவும் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதாக நியூஸ்கார்டு ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.
“எந்த ஆட்சி வந்தாலும் லாக் அப் மரணம் நடந்து கொண்டுதான் இருக்கின்றது. அய்யா ஸ்டாலின் ஆட்சியிலாவது உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளனர். அய்யா எடப்பாடி ஆட்சியில் நடந்த லாக்கப் மரணம் இன்னும் விசாரணையில் தான் உள்ளது” என்று சீமான் பேசியதாக அந்த நியூஸ்கார்டில் குறிப்பிடப்பட்டிருந்தது.



Also Read: சிவகங்கை இளைஞர் அஜித்குமார் மாரடைப்பால் மரணமடைந்தார் என்று மு.க.ஸ்டாலின் கூறினாரா?
Fact Check/Verification
ஸ்டாலின் ஆட்சியில் உடனடி நடவடிக்கை எடுத்துள்ளனர். எடப்பாடி பழனிசாமி ஆட்சி மரணம் இன்னும் விசாரணையில்தான் உள்ளது என்று திமுகவுக்கு ஆதரவாக சீமான் பேசியதாக தகவல் ஒன்று பரவியதை தொடர்ந்து நாதகவின் மாநில செய்தி தொடர்பாளர் பாக்கியராசனை தொடர்புக் கொண்டு இத்தகவல் குறித்து விசாரித்தோம்.
அவர் இத்தகவல் பொய்யானது; சீமான் இவ்வாறு பேசவில்லை என்று பதிலளித்தார்.
இதனையடுத்து தேடுகையில் “அப்பாவின் ஆட்சியில் கொல்லப்படும் அப்பாவிகள்! நான்கு ஆண்டுகால தீய திராவிட மாடல் ஆட்சி; நடைபெறும் காவல்துறை விசாரணை படுகொலைகளே சாட்சி!” என்று தலைப்பிட்டு அஜித்குமார் மரணம் தொடர்பாக ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியை கடுமையாக விமர்சித்து அறிக்கை ஒன்றை சீமான் அவரது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருப்பதை காண முடிந்தது.
அந்த அறிக்கையில் “…தமிழ்நாட்டில் திமுக ஆட்சிப்பொறுப்பேற்ற கடந்த நான்கு ஆண்டுகளில் 24 விசாரணை மரணங்கள் நிகழ்ந்திருப்பதாக தகவல் அறியும் சட்டம் மூலம் பெறப்பட்ட தகவல் கூறுகின்றது. ஆனால், உண்மையில் திமுக ஆட்சியில் தமிழ்நாடு முழுவதும் காவல்துறை விசாரணையின்போது கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை நாற்பதை தாண்டும். திமுக ஆட்சியில் 2021 ஆம் ஆண்டு 10 விசாரணை மரணங்களும், 2022 ஆம் ஆண்டு 11 விசாரணை மரணங்களும், 2023 ஆம் ஆண்டு 7 விசாரணை மரணங்களும், 2024 ஆம் ஆண்டு 9 விசாரணை மரணங்களும் காவல்துறை விசாரணையின்போது நடைபெற்றதாக தெரியவருகிறது.
நடப்பாண்டில் நடைபெற்றுள்ள விசாரணை மரணங்கள் இவற்றில் கணக்கிடப்படவில்லை. காவல்துறை விசாரணையின்போது நடைபெறும் படுகொலைகளில் குஜராத்தை பின்னுக்கு தள்ளி தென்மாநிலங்களில் முதலிடம் பெற்றிருப்பதுதான் தீய திராவிட மாடல் அரசின் ஈடு இணையற்ற சாதனையாகும்…” என்று தெரிவிக்கப்பட்டிருந்ததை காண முடிந்தது.
நாதகவின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்திலும் இந்த அறிக்கை குறித்து பதிவிடப்பட்டிருந்தது.
கிடைத்த ஆதாரங்களின்படி பார்க்கையில் அஜித்குமார் கொலை வழக்கில் திமுகவுக்கு ஆதரவாக சீமான் பேசினார் என்று பரப்பப்படும் தகவல் தவறானது என அறிய முடிகின்றது.
இதை தொடர்ந்து வைரலாகும் நியூஸ்கார்டானது புதிய தலைமுறையின் நியூஸ்கார்டு டெம்ப்ளேட்டை பயன்படுத்தி உருவாக்கப்பட்டிருப்பதால் அந்நிறுவனம் இவ்வாறு ஒரு நியூஸ்கார்டை வெளியிட்டதா என அதன் சமூக ஊடகப் பக்கங்களில் தேடினோம்.
இத்தேடலில் புதிய தலைமுறை இவ்வாறு செய்தியை வெளியிட்டிருக்கவில்லை என அறிய முடிந்தது.
இதனையடுத்து புதிய தலைமுறை டிஜிட்டல் தலைவர் இவானியை தொடர்புக் கொண்டு வைரலாகும் நியூஸ்கார்ட் குறித்து விசாரித்தோம். அவர் வைரலாகும் நியூஸ்கார்ட் போலியானது, இந்த கார்டை புதிய தலைமுறை வெளியிடவில்லை என்று பதிலளித்தார்.
Also Read: உபி லக்னோவில் கண்டறியப்பட்ட ஆயுதங்கள் என்று பரவும் புகைப்படம் உண்மையா?
Conclusion
ஸ்டாலின் ஆட்சியில் உடனடி நடவடிக்கை எடுத்துள்ளனர். எடப்பாடி பழனிசாமி ஆட்சி மரணம் இன்னும் விசாரணையில்தான் உள்ளது என்று திமுகவுக்கு ஆதரவாக சீமான் பேசியதாக பரவும் தகவல் முற்றிலும் தவறானதாகும்.
இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
Phone Conversation with Se.Pakkiaraj, State spokesperson, NTK
Phone Conversation with Ivany, Digital Head, Puthiya Thalaimurai
X post from Seeman, Chief Coordinator, NTK, dated June 30, 2025.
X post from NTK, dated July 1, 2025.