Fact Check
வக்பு மசோதா நிறைவேறியதால் மக்களவையில் அழுதாரா அசாதுதின் ஒவைசி?
Claim
வக்பு மசோதா நிறைவேறியதால் மக்களவையில் அழுதார் அசாதுதின் ஒவைசி.
Fact
இத்தகவல் தவறானதாகும். கடந்த வருடம் ஆகஸ்டில் நடந்த கூட்டத்தின்போது அசாதுதின் ஒவைசி எதேச்சையாக அவரது கண்கண்ணாடியை கழற்றி விட்டு, அவரது கண்களை துடைத்தார். அந்நிகழ்வே இவ்வாறு திரித்து பரப்பப்படுகின்றது,
வக்பு சட்ட திருத்த மசோதா நேற்றைய முன்தினம் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. மசோதாவை நிறைவேற்ற 272 மக்களவை உறுப்பினர்களின் ஆதரவு தேவை என்ற நிலையில் 288 உறுப்பினர்களின் ஆதரவுடன் மசோதா நிறைவேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து நேற்று மாநிலங்களைவையிலும் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டு, 128 மாநிலங்களவை உறுப்பினர்களின் ஆதரவோடு இந்த மசோதா நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் மக்களவையில் இம்மசோதா நிறைவேற்றப்பட்டபோது ஹைதராபாத் மக்களவை உறுப்பினரான அசாதுதின் ஒவைசி அழுததாக வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.



சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் அதுக்குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: 75 வயதிலும் தளராமல் நடனம் ஆடும் ஜெமினி கணேசன் மகள் நடிகை ரேகா என்று பரவும் வீடியோ உண்மையா?
Fact Check/Verification
வக்பு மசோதா நிறைவேறியதால் மக்களவையில் அசாதுதின் ஒவைசி அழுததாக வீடியோ ஒன்று பரப்பப்பட்டதை தொடர்ந்து அவ்வீடியோ குறித்து ஆராய்ந்தோம். வைரலாகும் வீடியோவில் ஒவைசி நீல நிறத்தில் உடை அணிந்திருப்பதை காண முடிந்தது. ஆனால் வக்பு சட்ட திருத்த மசோதா தொடர்பாக நடந்த விவாதத்தில் அவர் வெள்ளை நிற ஆடையே அணிந்திருந்தார்.

இதனையடுத்து வைரலாகும் வீடியோவில் “AIMIM RR District” எனும் வாட்டர் மார்க் இருப்பதை காண முடிந்தது. இதனை அடிப்படையாக வைத்து தேடியதில் @aimim_rr_district எனும் பயனர் ஐடியை கொண்ட இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆகஸ்ட் 07, 2024 அன்று இதே வீடியோ பகிரப்பட்டிருப்பதை காண முடிந்தது.

இதனையடுத்து தேடியதில் சன்சத் டிவி யூடியூப் பக்கத்தில் அத்தேதியில் (ஆகஸ்ட் 07, 2024) நடந்த மக்களவை கூட்ட விவாத வீடியோ ஒன்று பகிரப்பட்டிருப்பதை காண முடிந்தது.
அவ்வீடியோவில் பீகாரை சார்ந்த மக்களவை உறுப்பினர் பப்பு யாதவ் பேசிக் கொண்டிருக்கையில் (4:35 நேரத்தில்) ஒவைசி அவரது கண்கண்ணாடியை கழற்றிவிட்டு, அவரது கண்களை துடைப்பதை காண முடிந்தது.

தொடர்ந்து தேடுகையில் NDTV இந்தியா, ஒடிசா லைவ் உள்ளிட்ட யூடியூப் பக்கங்களிலும் இந்த விவாதம் தொடர்பான வீடியோ பகிரப்பட்டிருப்பதை காண முடிந்தது. அவற்றிலும் ஒவைசி கண்களை துடைக்கும் காட்சி இடம்பெற்றிருந்தது.


கிடைத்த ஆதாரங்களின்படி பார்க்கையில் அசாதுதின் ஒவைசி எதேச்சையாக கண்களை துடைத்த நிகழ்வை திரித்து, அவர் அழுததாக பரப்பப்படுகின்றது என தெளிவாகின்றது.
Also Read: அன்புமணி தமிழ்நாட்டின் அடுத்த முதல்வர் என்று கருத்துக்கணிப்பு வெளியிட்டதா சி வோட்டர்?
Conclusion
வக்பு மசோதா நிறைவேறியதால் மக்களவையில் ஒவைசி அழுத்தாக பரப்பப்படும் தகவல் தவறானதாகும். ஒவைசி எதேச்சையாக கண்களை துடைத்த நிகழ்வே இவ்வாறு திரித்து பரப்பப்படுகின்றது. அதேபோல் ஒவைசி கண்களை துடைத்த இந்நிகழ்வும் அண்மையில் நடந்ததல்ல; அது சென்ற வருடம் ஆகஸ்டில் நடந்ததாகும்.
இந்த உண்மையானது கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது. ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Sources
Instagram Post By @aimim_rr_district, Dated August 7, 2024
YouTube Video By Sansad TV, dated August 7, 2024
Self Analysis
(இந்த செய்தி வசூதா பெரி ஆங்கிலத்தில் எழுதிய செய்தியை அடிப்படையாக கொண்டு எழுதப்பட்டுள்ளது)