Authors
Claim: கர்நாடகாவில் மின் கட்டணம் வசூலிக்க வந்த அதிகாரிகளின் நிலைமை
Fact: வைரலாகும் செய்தியின் பின்னணி தவறாகப் பரவுகிறது.
இலவச மின்சாரம் தருவதாக கர்நாடக அரசு அறிவித்து காங்கிரஸ் ஆட்சிக்கு வந்துள்ள நிலையில் மின்கட்டணம் வசூலிக்க சென்ற ஊழியரைத் தாக்கிய மக்கள் என்பதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
“#கர்நாடகவில் மின் கட்டணம் வசுலிக்க வந்த அதிகாரிகளின் நிலமை இப்படி தான் இருக்கு…இலவச மின்சாரம் தருவதாக சொல்லி காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பின்” என்பதாக இந்த வீடியோ வைரலாகிறது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இத்தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய இத்தகவல் குறித்து நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் ஆய்வு செய்ய முடிவு செய்தோம்.
Also Read: திமுக ஆட்சியில் சிறுவர்கள் மது அருந்தவதாக வைரலாகும் வீடியோவின் உண்மை பின்னணி!
காங்கிரஸின் இலவச மின்சார வாக்குறுதி:
கடந்த மே 13ஆம் தேதியன்று சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று கர்நாடகாவில் ஆட்சியைப் பிடித்தது காங்கிரஸ். முன்பாக, தேர்தல் அறிக்கையில் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் 200 யூனிட் மின்சாரம் மக்களுக்கு ஒவ்வொரு மாதமும் இலவசமாக வழங்கப்படும் என்று உறுதியளித்தது. இதனைத்தொடர்ந்து, அங்கு பொதுமக்கள் பலரும் மின்சார கட்டணம் செலுத்த மறுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Fact Check/Verification
இலவச மின்சாரம் தருவதாக கர்நாடக அரசு அறிவித்துள்ள நிலையில் மின்கட்டணம் வசூலிக்க வந்த மின்சார வாரிய அதிகாரி தாக்கப்பட்டதாகப் பரவும் செய்தி குறித்த உண்மையறிய அதுபற்றிய ஆய்வில் ஈடுபட்டோம்.
நியூஸ்செக்கர் தரப்பில் வைரல் வீடியோவை ஆய்வு செய்தபோது, குறிப்பிட்ட நபர் மின்சார வாரிய ஊழியரை தாக்கிய போதிலும், எங்கும் காங்கிரஸின் வாக்குறுதியைக் குறிப்பிடவில்லை. தொடர்ந்து, கர்நாடக மின் ஊழியர் தாக்குதல் என்பதாக கீவேர்டுகள் மூலமாக தேடியபோது, Deccan Herald வெளியிட்டிருந்த மே 24ம் தேதி செய்தி நமக்கு கிடைத்தது. அதில், குல்பர்கா மின்சார நிறுவனத்தில் கோப்பால் ஊழியரை நபர் ஒருவர் தாக்கியதாகவும், அவருடைய மின்சார கட்டண பாக்கியை செலுத்த மறுத்ததாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
”கோப்பால் மாவட்ட குகனப்பள்ளியைச் சேர்ந்த நபர், மின்சார பாக்கியை வசூலிக்கச் சென்ற கெஸ்காம் ஊழியரைத் தாக்கியதாக காவல்துறை தெரிவித்துள்ளது. குறிப்பிட்ட நபர் மின்சார கட்டணத்தை முறையாக செலுத்தாத காரணத்தால் அவரது வீட்டில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. எனினும், அவர் சட்டவிரோதமாக முறையற்ற மின் இணைப்பை உபயோகித்த நிலையில் அவரிடம் கேள்வி எழுப்பியுள்ளனர் கெஸ்காம் ஊழியர்கள். அதனைத் தொடர்ந்து அவர்களில் ஒருவரை தாக்கியுள்ளார் குறிப்பிட்ட அந்த நபர். வைரலாகும் வீடியோவை தாக்குதலுக்கு உள்ளான ஊழியருடன் இணைந்து பணிபுரியும் மற்றொரு ஊழியர் எடுத்துள்ளார்” என்று அச்செய்தி மேலும் தெரிவித்துள்ளது.
மே 24, 2023 அன்று பிரஜாவானி வெளியிட்டுள்ள செய்தியில், “சந்திரசேகர் ஹிரேமத் என்கிற நபர் கெஸ்காம் ஊழியரைத் தாக்கியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார். அவருடைய மின்சார கட்டண பாக்கியை வசூலிக்கச் சென்ற கெஸ்காம் ஊழியரை சந்திரசேகர் தாக்கியுள்ளார். மாவட்ட கண்காணிப்பாளர் யசோதா வந்தகோடி இதனை உறுதிப்படுத்தியுள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
”சந்திரேசேகரின் மின்சார கட்டண பாக்கி 9000 ரூபாயாக இருந்துள்ளது. அவருடைய மின்சார இணைப்பும் துண்டிக்கப்பட்டிருந்தது. ஆனால், அவர் சட்டவிரோதமான மின் இணைப்பை உபயோகித்து வந்துள்ளார். கோபால் கெஸ்காம் EE ராஷேஜ், குறிப்பிட்ட ஊழியர் சந்திரசேகரிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பியதால் தாக்கப்பட்டுள்ளார் என்று பிரஜாவானியிடம் தெரிவித்துள்ளார்” என்று மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த எந்த செய்தியிலும் காங்கிரஸின் இலவச மின்சார அறிவிப்பு குறித்த வார்த்தைகளோ, சந்திரசேகர் அதைப்பற்றி பேசியதாகவோ வாசகங்கள் இடம்பெற்றிருக்கவில்லை.
குறிப்பிட்ட நிகழ்வை செய்தியாக வெளியிட்ட கன்னட பிரபாவின் மூத்த பத்திரிக்கையாளரான சோமசேகரா ரெட்டியை இதுகுறித்து நாம் தொடர்பு கொண்டு பேசினோம். அவர் நம்மிடம், “காங்கிரஸின் தேர்தல் வாக்குறுதியான இலவச மின்சார அறிவிப்பிற்கும் இந்த நிகழ்விற்கும் எந்த தொடர்பும் இல்லை. 9000 ரூபாய் மின் கட்டண பாக்கி வைத்திருந்த அந்த நபர் சட்டவிரோத இணைப்பையும் உபயோகித்துள்ளார். அதுகுறித்து கேள்வி எழுப்பிய ஊழியரைத் தாக்கியுள்ளார்” என்று தெரிவித்தார்.
The South First ஆசிரியரான அனுஷா ரவியின் ட்வீட்டில், கோப்பால் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் யசோதா வந்தகோடி குறிப்பிட்ட நிகழ்வு குறித்து விளக்கமளிக்கும் வீடியோ இடம்பெற்றுள்ளது.
மே 25, 2023 அன்று வெளியான ஹிந்துஸ்தான் டைம்ஸ் கட்டுரையில், “காங்கிரஸின் இலவச மின்சார அறிவிப்புடன் இந்த நிகழ்வு தொடர்புடையது அல்ல என்று காவல்துறையினர் விளக்கம் அளித்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read: கர்நாடகா தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதற்கு மக்களுக்கு பாகிஸ்தான் பிரதமர் வாழ்த்து தெரிவித்தாரா?
Conclusion
இலவச மின்சாரம் தருவதாக கர்நாடக அரசு அறிவித்து காங்கிரஸ் ஆட்சிக்கு வந்துள்ள நிலையில் மின்கட்டணம் வசூலிக்க சென்ற ஊழியரைத் தாக்கிய மக்கள் என்பதாகப் பரவுகின்ற செய்தி தவறான புரிதலில் பரவுகிறது என்பது நமக்கு கிடைத்த ஆதாரங்களின் வாயிலாக தெளிவாகியுள்ளது.
ஆகவே வாசகர்கள் யாரும் இத்தகவலை நம்ப வேண்டாம் என்று நியூஸ்செக்கர் தமிழ் சார்பில் கேட்டுக் கொள்கின்றோம்.
Result: Partly False
Our Sources
Deccan Herald report , May 24, 2023
Prajavani report, May 24, 2023
Kannadaprabha report, May 24, 2023
Conversation with Somashekhara Reddy, senior correspondent, Kannada Prabha
(உங்களுக்கு ஏதேனும் ஒரு தகவல் குறித்து சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது ஏதாவது ஒரு தகவலின் உண்மைத்தன்மைக் குறித்து அறிய விரும்பினாலோ 9999499044 என்கிற வாட்ஸ்ஆப் எண்ணிற்கோ, அல்லது checkthis@newschecker.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கோ உங்கள் கேள்விகளை அனுப்பலாம்.
எங்கள் இணையத்தளத்தில் உள்ள Contact Us பக்கத்திற்குச் சென்று அதில் உள்ள படிவத்தைப் பூர்த்தி செய்தும் அனுப்பலாம்)